கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2-வது சாட்சி ஊட்டி கோர்ட்டில் வாக்குமூலம் - விசாரணை வருகிற 10-ந் தேதிக்கு தள்ளிவைப்பு


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2-வது சாட்சி ஊட்டி கோர்ட்டில் வாக்குமூலம் - விசாரணை வருகிற 10-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 29 Jan 2020 10:45 PM GMT (Updated: 29 Jan 2020 9:19 PM GMT)

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2-வது சாட்சி ஊட்டி கோர்ட்டில் வாக்குமூலம் அளித்தார். வழக்கு விசாரணை வருகிற 10-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

ஊட்டி, 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பிரகா‌‌ஷ் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ‌‌ஷயான், மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோ‌‌ஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். மேலும், வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதற்கிடையே நேற்று முன்தினம் கோடநாடு கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கில் தொடர்புடைய 10 பேரும் ஊட்டி கோர்ட்டில் ஆஜராகினர். காவல்துறை சார்பில் 2 சாட்சிகள் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இந்தி மற்றும் மலையாள மொழிகள் தெரிந்த மொழிபெயர்ப்பாளர் இருக்க வேண்டும் என்று எதிர்தரப்பு வக்கீல் வாதிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. ‌‌ஷயான், மனோஜ் இருவரையும் போலீசார் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மற்ற 8 பேரும் ஆஜரானார்கள். கொலை வழக்கின் 2-வது சாட்சியான பஞ்சம் விஸ்வகர்மா(வயது 47) மாவட்ட நீதிபதி வடமலை முன்னிலையில் இந்தி மொழிபெயர்ப்பாளர் மூலம் அரசு வக்கீல் நந்தகுமார் கேட்ட கேள்விகளுக்கு வாக்குமூலம் அளித்தார். அப்போது மேற்கு வங்காளம் மாநிலம் அலியூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்று தெரிவித்து, ஆதார் அடையாள அட்டையை சமர்ப்பித்தார்.

பஞ்சம் விஸ்வகர்மா வாக்குமூலத்தில் கூறியதாவது:- தற்போது சிலிகுரி பகுதியில் உணவகம் வைத்து உள்ளேன். கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 23.4.2017-ந் தேதியன்று காவலாளியாக 7-வது நுழைவாயிலில் பணியில் இருந்தேன். நள்ளிரவு 2 மணிக்கு 8-வது நுழைவுவாயில் காவலாளி கிரு‌‌ஷ்ண தாபா தனது வலது கை விரலிலும், இடது கையிலும் வெட்டுக்காயம் இருந்ததை காண்பித்தார். ஒரு லாரியில் வந்த 8 பேர் நுழைவுவாயில் முன் நிறுத்தி விட்டு தன்னை தாக்கியதாகவும், கத்தியால் வெட்டியதாகவும், வாயில் துணியை கட்டியதாகவும், முகத்தில் ஸ்பீரே அடித்ததாகவும் என்னிடம் தெரிவித்தார்.

6 பேர் எஸ்டேட் உள்ளே சென்றதாகவும், 2 பேர் லாரியில் இருந்ததாகவும், அதன் பிறகு 10-வது நுழைவுவாயிலில் பார்த்தபோது காவலாளி ஓம்பிரகாஷ் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் முகத்தில் துணி சுற்றப்பட்டு இறந்த நிலையில் மரத்தில் தலைகீழாக கட்டப்பட்டு இருந்தார். இதுகுறித்து எஸ்டேட் எழுத்தருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தேன். எஸ்டேட் எழுத்தர், டிரைவர்,ஆகியோர் சரக்கு வாகனத்தில் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்றோம். அங்கு காவலாளி அறை கண்ணாடி மற்றும் பங்களா கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது.

ஓம்பிரகாஷ் இறந்து கிடந்தார். சுனில் தாபா 10-வது நுழைவுவாயிலுக்கு வரவழைக்கப்பட்டு சரக்கு வாகனம் மூலம் கிரு‌‌ஷ்ண தாபாவை சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நான் அங்கு பணியில் இருந்தேன். காலை 9 மணிக்கு போலீசார் என்னை போலீஸ் நிலையம் அழைத்து சென்று வாக்குமூலம் பெற்றனர். இவ்வாறு அவர் கூறினார். 3-வது சாட்சியான சுனில் தாபாவிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.

இதையடுத்து எதிர்தரப்பு வக்கீல் ‌‌ஷயான், மனோஜ் இருவருக்கும் நீதிமன்றம் மூலம் ஜாமீன் வழங்கப்பட வில்லை. அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்தார். முதல் சாட்சி கிரு‌‌ஷ்ண தாபா இல்லாமல், 2-வது, 3-வது சாட்சிகளிடம் விசாரித்ததால் நாங்கள் குறுக்கு விசாரணை செய்யவில்லை. மேலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கில் இருந்து 10 பேரையும் விடுவிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. எனவே, ஊட்டியில் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றார். அதனை தொடர்ந்து நீதிபதி வடமலை வருகிற 10-ந் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Next Story