அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி செல்லும் வாகன உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி செல்லும் வாகன உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்தார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம்,
மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றிணைந்து விபத்துகளே இல்லாத தமிழகத்தை உருவாக்க உறுதி எடுத்துள்ளன. அதன்படி சாலைகளில் பெருமளவு விபத்து ஏற்பட முக்கிய காரணமாக அமைவது அதிக பளுவுடன் பயணிக்கும் கனரக வாகனங்கள்தான். இதனால் சாலைகள் பெருமளவில் பாதிப்படைந்து உயிர் சேதங்கள் நிகழ்வதோடு அரசுக்கு பெருமளவு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.
பெருகி வரும் சாலை விபத்துகள் மற்றும் அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு அதிக பாரத்துடன் பயணிக்கும் கனரக வாகனங்கள் மீது மத்திய, மாநில அரசுகள் கடும் அபராதம் விதித்து, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே இனி வரும் காலங்களில் உயிரிழப்புகளை தவிர்த்து சிறப்பான வர்த்தகம் நடை பெறும் நோக்கில் அனைத்து குவாரி குத்தகைதாரர்களுக்கு எச்சரிக்கையாக தெரிவிக்கப்படுகிறது.
கனிமவளங்களை ஏற்றி செல்லும் வாகன உரிமையாளர்கள் தார்மிக பொறுப்பேற்று அதிக பாரம் ஏற்றுவதில்லை என்ற முடிவுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இதை பின்பற்றாமல் அதிக பாரம் ஏற்றி வரும் கனிம வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த வாகன உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story