புதுச்சேரியில் பாண்லே பால் தட்டுப்பாடு
புதுவையில் பாண்லே பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.
புதுச்சேரி,
புதுவை குரும்பாபேட்டில் அரசு நிறுவனமான பாண்லே செயல்பட்டு வருகிறது. உள்ளூரில் மட்டுமல்லாது தமிழகம் மற்றும் பெங்களூருவில் இருந்து பால் கொள்முதல் செய்து தினமும் ஒரு லட்சம் லிட்டர் பால் அளவுக்கு புதுவை மக்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. காலையில் 55 ஆயிரம் லிட்டரும், மாலையில் 45 ஆயிரம் லிட்டரும் பாண்லே மூலம் பால் சப்ளை செய்யப்படும்.
இதில் 55 ஆயிரம் லிட்டர் மட்டுமே புதுவை மாநிலத்தின் உற்பத்தி ஆகும்.
தற்போது பனிக்காலம் என்பதால் புதுவை மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தி 55 ஆயிரத்திலிருந்து 45 ஆயிரமாக குறைந்துள்ளது. இதேபோல் வெளிமாநிலங்களிலும் பால் உற்பத்தி குறைந்துள்ளது.
இதன் காரணமாக வெளிமாநிலத்தில் இருந்து வரும் பாலின் அளவும் குறைந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக பூத்களில் பால் கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்கள்.
பெங்களூருவில் பால் விலை உயர்வை காரணமாக வைத்து தனது கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பாண்லே நிறுவனத்துக்கு பால் சப்ளை செய்யும் நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்து வருவதாக தெரிகிறது. ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பாண்லேவுக்கு இன்று முதல் பால் சப்ளையை நிறுத்த பெங்களூரு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் இன்று முதல் பாண்லே பால் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக புதுவை மக்களின் தேவையான ஒரு லட்சம் லிட்டர் பாலுக்கு பதிலாக 75 ஆயிரம் லி்ட்டர் அளவிலேயே பால் சப்ளை செய்யப்படுவதால் புதுவையில் பாண்லே பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால் முகவர்களுக்கு வழக்கமாக வழங்குவதைவிட கால் பங்கு குறைத்தே சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் பால் வந்த சிறிது நேரத்தில் அவ்வளவும் விற்பனையாகிவிடுகிறது. இதன்காரணமாக பல்வேறு பால் பூத்களிலும் பால் இல்லை என்ற அறிவிப்பு பலகையை நாள்தோறும் காணமுடிகிறது.
உள்ளூர் உற்பத்தியில் அக்கறை காட்டாமல் வெளிமாநிலத்தில் இருந்து பால் கொள்முதல் செய்வதிலேயே நிர்வாகம் அக்கறை காட்டியதுதான் இப்போதைய பால் தட்டுப்பாட்டிற்கு காரணம் என்று பாண்லே ஊழியர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
Related Tags :
Next Story