மாவட்ட செய்திகள்

குடியுரிமை சட்டத்தை கண்டித்து முழு அடைப்பு போராட்டம்: மும்பையில் ரெயில் மறியல்; கடைகள் அடைப்பு + "||" + Full shutdown protest over citizenship law: Railway picket in Mumbai; Stores shutters

குடியுரிமை சட்டத்தை கண்டித்து முழு அடைப்பு போராட்டம்: மும்பையில் ரெயில் மறியல்; கடைகள் அடைப்பு

குடியுரிமை சட்டத்தை கண்டித்து முழு அடைப்பு போராட்டம்: மும்பையில் ரெயில் மறியல்; கடைகள் அடைப்பு
குடியுரிமை சட்டத்தை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மும்பையில் ரெயில் மறியல்; கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் துலேயில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தினர்.
மும்பை,

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் மும்பையில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. துலேயில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போலீசார் வன்முறையை கட்டுப்படுத்தினர்.


குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் பகுஜன் கிராந்தி மோர்ச்சா உள்பட பல்வேறு அமைப்புகள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தது.

அதன்படி மராட்டியத்தில் நேற்று முழு அடைப்பு நடந்தது. மும்பையில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் டோங்கிரி, பைகுல்லா, நாக்பாடா, மாகிம், பாந்திரா- பெரம்பாடா, குர்லா பைப் ரோடு, கசாய்வாடா, அந்தேரி, ஜோகேஸ்வரி, மலாடு-மால்வானி மற்றும் விக்ரோலி ஆகிய பகுதிகள் ஸ்தம்பித்தன. இங்கு கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. ஆட்கள் நடமாட்டத்தை பார்ப்பதே அரிதாக இருந்தது.

தானே மாவட்டம் மும்ராவில் முழு அடைப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இங்கு வாகனங்கள் இயக்கப்படாததால் சாலை வெறிச்சோடி காணப்பட்டது. மார்க்கெட்டுகள், கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

இதனால் மும்ராவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. நவி மும்பையில் தலோஜா, வாஷி மற்றும் பன்வெலிலும் முழு அடைப்பு நடந்தது. மேலும் அப்பகுதிகளில் மனித சங்கிலி போராட்டமும் நடந்தது.

மும்பை காஞ்சூர்மார்க் ரெயில் நிலையத்திற்கு சில அமைப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் வந்து விரைவு வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி. நோக்கி செல்லும் மின்சார ரெயிலை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் ரெயிலின் முகப்பு பகுதியில் ஏறி கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் போட்டனர்.

பரபரப்பான காலை நேரத்தில் இந்த போராட்டம் நடைபெற்றதால் ஆத்திரமடைந்த பயணிகள் சிலர் போராட்டக்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பதற்றம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியதுடன், 33 ஆண்கள் மற்றும் 14 பெண்கள் உள்பட 47 பேரை கைது செய்தனர். இதனால் ரெயில் சேவை சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது.

பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு பகுதியில் கடைகள் மற்றும் தொழிற்சாலைகளை மூட வலியுறுத்தி போராட்டக்காரர்கள் திரண்டனர். மேலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் காலை வேலையில் அலுவலகம் செல்பவர்கள் அவதி அடைந்தனர். அப்பகுதியில் கோலானி நாக்கா, வாலிவ் நாக்கா உள்பட பல இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.

துலே மாவட்டத்தில் முழு அடைப்பின்போது சலிஸ்காவ் சாலை போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட 100 அடி சாலையில் முஸ்லிம்கள் பேரணி நடத்தினர். அப்போது அவர்களுக்கும், மற்றொரு பிரிவினருக்கும் இடையே மோதல் வெடித்தது. அவர்கள் கற்களை வீசி வன்முறையில் இறங்கினர்.

நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்த போலீசார் வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக வானத்தை நோக்கி 4 முறை துப்பாக்கியால் சுட்டனர். மேலும் 6 கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

இதேபோல் யவத்மால், அவுரங்காபாத் மாவட்டங்களிலும் போராட்டத்தின்போது வன்முறை சம்பவங்கள் நடந்தன.

யவத்மாலில் இருபிரிவினருக்கு இடையேயான போராட்டத்தை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அவுரங்காபாத் அர்சுல் பகுதியில் மாநகராட்சி பஸ் மீது கற்கள் வீசப்பட்டன. ஹிமாயத்பாக் பகுதியில் அரசு பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. டாஸ்மாக் கடைகள் திறந்ததை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்; 15 பேர் கைது
டாஸ்மாக் கடைகள் திறந்ததை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சி யினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய 5 வெளிநாட்டு பயணிகள் வெளியேற்றம்
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய 5 வெளிநாட்டு பயணிகள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
3. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களின் நிலை என்ன - ஐகோர்ட்டு கேள்வி
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களின் நிலை என்ன? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
4. குடியுரிமை சட்டத்தை அ.தி.மு.க. ஆதரிக்காமல் இருந்திருந்தால் தமிழகத்தில் போராட்டம் வந்திருக்காது - கனிமொழி எம்.பி. பேட்டி
குடியுரிமை திருத்த சட்டத்தை அ.தி.மு.க. ஆதரிக்காமல் இருந்திருந்தால், தமிழகத்தில் போராட்டம் வந்திருக்காது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
5. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அமளி-வெளிநடப்பு
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வெளி நடப்பு செய்தன..