விருதுநகர் அருகே, பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 5 அறைகள் இடிந்து தரைமட்டம்


விருதுநகர் அருகே, பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 5 அறைகள் இடிந்து தரைமட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2020 4:15 AM IST (Updated: 30 Jan 2020 7:16 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 5 அறைகள் இடிந்து தரைமட்டமானது.

விருதுநகர்,

விருதுநகர் அருகே வி.முத்துராமலிங்கபுரத்தில் தியாகராஜபுரத்தை சேர்ந்த காளிராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் மொத்தம் 40 அறைகள் உள்ளன. நேற்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் அறைகளில் வேலைகளை தொடங்கினர். மேலும் பட்டாசு ஆலை வளாகத்தில் இருந்த புற்களை அகற்றுவதற்கு தொழிலாளர்கள் எந்திரத்தை பயன்படுத்தி கொண்டிருந்தனர்.

அப்போது புல்வெளியில் கருமருந்து சிதறி கிடந்ததால் திடீரென தீப்பிடித்தது. இதில் தீ மளமனவென பரவியதில் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த அறைகளில் வெப்பம் அதிகரித்தது. இதனால் அறைகளில் இருந்த கருமருந்து வெடித்தது. இதனால் அறைகளில் வேலைபார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் புல்வெளியில் தீப்பிடித்த உடன் அறைகளை விட்டு வெளியே ஓடி விட்டனர். புற்களை அகற்றி கொண்டிருந்த தொழிலாளர்களும் அங்கிருந்து தப்பியோடினர்.

அறைகளில் இருந்த கருமருந்து வெடித்ததால் 5 அறைகள் இடிந்து தரைமட்டமானது. இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று பட்டாசு ஆலையில் எரிந்த தீயை அணைத்தனர். புல்வெளியில் முதலில் தீப்பிடித்ததால் அறைகளில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறி விட்டதால் வெடி விபத்தில் யாரும் சிக்கவில்லை.

இந்த வெடிவிபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story