கூடலூர் அருகே, மலைப்பாதையில் கவிழ்ந்த அரசு பஸ் - 35 பயணிகள் உயிர் தப்பினர்


கூடலூர் அருகே, மலைப்பாதையில் கவிழ்ந்த அரசு பஸ் - 35 பயணிகள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 30 Jan 2020 10:45 PM GMT (Updated: 30 Jan 2020 3:54 PM GMT)

கூடலூர் அருகே மலைப்பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 35 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கூடலூர்,

கூடலூர் நகராட்சியின் 21-வது வார்டுக்கு உட்பட்ட லோயர்கேம்ப்பில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில், தமிழக எல்லைப் பகுதியில் குமுளி அமைந்துள்ளது. லோயர்கேம்ப்பில் இருந்து குமுளி செல்ல மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதை அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும்.

இந்த மலைப்பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடிக்கு வருகிற சுற்றுலா பயணிகள் மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து ஏலக்காய் தோட்டங்களுக்கு கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் இந்த மலைப்பாதை வழியாகவே வாகனங்களில் செல்கின்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை குமுளியில் இருந்து மதுரை நோக்கி, அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 35 பேர் பயணம் செய்தனர். ஆண்டிப்பட்டியை சேர்ந்த விஜயகுமார் (வயது 31) என்பவர் பஸ்சை ஓட்டினார். மலைப்பாதையில், மாதாகோவில் என்னுமிடத்தில் உள்ள வளைவில் பஸ் திரும்பியது.

அப்போது, எதிர்பாராதவிதமாக மலைப்பாதையின் இடது புறத்தில் உள்ள பாறையில் பஸ் மோதி திடீரென கவிழ்ந்தது. இதனையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள், ‘அய்யோ அம்மா‘ என்று அலறினர். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, பஸ்சுக்குள் சிக்கிய பயணிகளை மீட்டனர்.

இதில் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்கள், கம்பம் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். இதற்கிடையே கவிழ்ந்த அரசு பஸ், கிரேன் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 35 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து லோயர்கேம்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story