துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தல்: அ.தி.மு.க.வினர் வராததால் மீண்டும் ஒத்திவைப்பு
துரிஞ்சாபுரம் ஒன்றியகுழு தலைவர் தேர்தலில் அ.தி.மு.க.வினர் வராததால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
கலசபாக்கம்,
திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 20 ஒன்றியகுழு உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் 9 பேரும், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 7 பேரும் மற்றும் சுயேச்சையாக 4 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த முறை நடந்த ஒன்றியகுழு தலைவருக்கான மறைமுக தேர்தலில் தி.மு.க. சார்பில் ஒன்றியகுழு உறுப்பினர்கள் 10 பேர் கலந்துகொண்டனர். அ.தி.மு.க. சார்பில் உள்ள ஒன்றியகுழு உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சைகள் உள்பட 10 பேர் கலந்துகொள்ளாததால் தேர்தல் நடத்த போதுமான 11 உறுப்பினர்கள் இல்லாததால் தேர்தல் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் 2-வது முறையாக நேற்று துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியகுழு தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க.வை சேர்ந்த உறுப்பினர்கள் 10 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். தேர்தல் அறிவிக்கப்பட்டு ½ மணி நேரத்துக்கு மேலாகியும் அ.தி.மு.க. மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் யாரும் வரவில்லை.
தேர்தல் நடத்த போதுமான உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாததால் மீண்டும் தேர்தல் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அலுவலர் அரவிந்த் அறிவித்து அங்கு நோட்டீஸ் ஒட்டினார். இதனால் தி.மு.க.வை சேர்ந்த உறுப்பினர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள், அ.தி.மு.க.வை சேர்ந்த உறுப்பினர்கள் வேண்டுமென்றே சுயேச்சை சேர்ந்த உறுப்பினர்களை கலந்துகொள்ளாமல் தடுத்து வருவதாக புகார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக தேர்தலில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story