அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்ப பாடத்தை கண்டறிய தேர்வு - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்ப பாடத்தை கண்டறிய தேர்வு - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 30 Jan 2020 10:45 PM GMT (Updated: 30 Jan 2020 5:20 PM GMT)

அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்ப பாடத்தை கண்டறியும் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கடத்தூர், 

கோபி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட முருகன்புதூர், நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் பள்ளி, மொடச்சூர் நகர்மன்ற பள்ளி, பழனியம்மாள் பெண்கள் பள்ளி, கரட்டடிபாளையம், காசிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் படிக்கும் மாணவ-மாணவிகள் 772 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி மொடச்சூர் நகராட்சி பள்ளியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையில் இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதியதாக விருப்பப்பாடத்தை கண்டறியும் தேர்வு (நாட்டமறித் தேர்வு) நடத்தப்படும்.

தற்போது 10-ம் வகுப்புக்கான தேர்வு நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு பாடத்திலும் பொதுஅறிவு உட்பட 10 கேள்விகள் கேட்கப்படும். இவற்றில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை பொறுத்து அவர்கள் தங்கள் எதிர்காலத்தில் தேர்வு செய்ய உள்ள விருப்ப பாடங்களை தற்போதே கண்டறிய முடியும். இதில் மாணவர்களின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்பட மாட்டாது.

9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் 1 வாரத்தில் விருப்ப பாடத்தை கண்டறியும் தேர்வு நடைபெறும். வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் 7 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும்.

மேலும், கரும்பலகைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கப்படும். மாணவ-மாணவிகள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதற்கு 1,000 வார்த்தைகள் கொண்ட சி.டி. விரைவில் வழங்கப்படும். பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மலைப்பகுதிகளில் கூடுதலாக 52 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Next Story