மாநகராட்சி பள்ளி மாணவர்களின் காலை உணவு திட்டத்துக்கு ரூ.2 கோடி கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்


மாநகராட்சி பள்ளி மாணவர்களின் காலை உணவு திட்டத்துக்கு ரூ.2 கோடி கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்
x
தினத்தந்தி 30 Jan 2020 11:15 PM GMT (Updated: 30 Jan 2020 5:57 PM GMT)

மாநகராட்சி பள்ளி மாணவர்களின் காலை உணவு திட்டத்துக்கு தன்னுடைய விருப்ப நிதியில் இருந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் ரூ.2 கோடி வழங்கினார்.

சென்னை,

‘அக்‌ஷய பாத்திரம்’ அறக்கட்டளை சார்பில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 5 ஆயிரம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிவைத்தார். இந்த திட்டம் வெற்றிக்கரமாக செயல்பட்டு வருகிறது. 12 மாநிலங்களில் 18 லட்சம் குழந்தைகளுக்கு ‘அக்‌ஷய பாத்திரம்’ அறக்கட்டளை சார்பில் காலை உணவு வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் வெற்றியை பார்த்து, கூடுதல் பள்ளிகளில் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய ஒப்புதல் அளித்ததோடு, ஒருங்கிணைந்த உணவு தயாரிக்கும் சமையல் அறையை ஏற்படுத்துவதற்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனது நிலத்தையும் பெருநகர சென்னை மாநகராட்சி வழங்கியது. இதையடுத்து சுமார் ரூ.5 கோடி செலவில் திட்டத்தை ‘அக்‌ஷய பாத்திரம்’ அறக்கட்டளை தயாரித்தது.

நலிந்த குழந்தைகளின் மேம்பாட்டுக்காக சேவையாற்றவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் ராஜ்பவன், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 12 ஆயிரம் குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிக்கும் ஒருங்கிணைந்த சமையலறை கட்டுவதற்கு ரூ.5 கோடி நன்கொடையாக வழங்க முன்வந்தது. இதையடுத்து ராஜ் பவன் மற்றும் ‘அக்‌ஷய பாத்திரம்’ அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தநிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தன்னுடைய விருப்ப நிதியில் இருந்து முதல் தவணையாக ரூ.2 கோடி விடுவித்துள்ளார். அதற்கான காசோலையை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், ‘அக்‌ஷய பாத்திரம்’ அறக்கட்டளையின் துணை தலைவர் கோடன்தரமா தாசாவிடம் வழங்கினார். இந்த நிகழ்வின்போது கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் உடன் இருந்தார்.

Next Story