விருத்தாசலம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு விவசாயிகள் சாலை மறியல்


விருத்தாசலம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 31 Jan 2020 3:45 AM IST (Updated: 31 Jan 2020 1:02 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், 4 நாட்களாகியும் நெல் கொள்முதல் செய்யவில்லை என புகார் கூறினர்.

விருத்தாசலம், 

விருத்தாசலத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கடலூர் மாவட்டம் மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் தாங்கள் விளைவிக்கும் விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்துவிட்டு செல்கின்றனர்.

தற்போது சம்பா நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு தினமும் சராசரியாக 10 ஆயிரம் நெல் மூட்டைகளுக்கு மேல் வருகிறது. ஆனால் போதிய இடவசதி இல்லாததால் நெல் மூட்டைகளை அங்கு வைக்க முடியவில்லை. இதன் காரணமாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் பணி பாதிக்கப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 27-ந் தேதி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்திருந்த நெல் மூட்டைைள நேற்று வரை கொள்முதல் செய்யவில்லை. கடந்த 4 நாட்களாக விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் இரவு, பகலாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலேயே காத்திருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஒன்று திரண்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு உள்ள விருத்தாசலம்-கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள், நெல்லை விற்பனை செய்வதற்காக வந்து 4 நாட்கள் ஆகியும் கொள்முதல் செய்யவில்லை எனவும், இதை வியாபாரிகள் சாதகமாக பயன்படுத்தி குறைந்த விலைக்கு நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதாகவும், இங்கு வரும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்து, உடனடியாக பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்றனர்.

அதற்கு போலீசார், இது தொடர்பாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளிடம் கூறுங்கள் என்றனர். இதையடுத்து விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகத்தை முற்றுகையிட்டனர். உடனே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, நெல்மூட்டைகளை உரிய விலைக்கு, உடனுக்குடன் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு, விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Next Story