அரசு திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் - பொது நிறுவனங்கள் குழு தலைவர் அறிவுறுத்தல்


அரசு திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் - பொது நிறுவனங்கள் குழு தலைவர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 31 Jan 2020 4:00 AM IST (Updated: 31 Jan 2020 1:43 AM IST)
t-max-icont-min-icon

அரசு திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என்று பொது நிறுவனங்கள் குழு தலைவர் செம்மலை எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.

பெரம்பலூர், 

தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான செம்மலை தலைமையிலான குழுவினர் மாவட்ட கலெக்டர் சாந்தா முன்னிலையில் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக நாரணமங்கலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர், இத்திட்டத்தின் மூலமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பயன்பெறும் பகுதிகள் குறித்தும், நாளொன்றுக்கு வினியோகம் செய்யப்படும் குடி நீரின் அளவு குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையின் செயல்பாடுகள் குறித்தும், பஸ்கள் இயக்கங்கள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்து, பொதுமக்களின் நலனுக்காக தேவையான வழித்தடங்களில் போதுமான அளவில் பஸ்களை இயக்கி பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் எறையூர் சர்க்கரை ஆலையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர், நாள் ஒன்றுக்கு அறவை செய்யப்படும் கரும்புகள் குறித்தும், ஆலையின் செயல்பாடுகள் மற்றும் இணை மின் உற்பத்தி திட்டம் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தனர்.

தொடர்ந்து துறைமங்கலத்தில் உள்ள மருந்து கிடங்கு மற்றும் பெரம்பலூரில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனையின் விரிவாக்கப்பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டனர்.

அதனை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் இக்குழுவின் உறுப்பினர்கள் பாண்டியன், சண்முகம், பிச்சாண்டி, அன்பில் மகே‌‌ஷ்பொய்யாமொழி, கோவி.செழியன், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தமிழ்ச்செல்வன், ஆர்.டி.ராமச்சந்திரன், தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பல்வேறு துறை வாயிலாக அரசு செயல்படுத்தி வரும் வளர்ச்சித்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், அத்திட்டங்களின் மூலமாக பயன் பெற்ற பயனாளிகள் குறித்தும், இக்குழுவினர் விரிவாக ஆய்வு செய்து அரசின் திட்டங்கள் தகுதியுடைய அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினர். பின்னர் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் செம்மலை கூறுகையில், தமிழக அரசு மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் நாரணமங்கலத்தில் செயல்படுத்தி வரும் நீர் உந்து நிலையத்தின் மூலமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 3 ஒன்றியங்களை சேர்ந்த 306 கிராம குடியிருப்புகள், அரும்பாவூர் மற்றும் பூலாம்பாடி பேரூராட்சிப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக பாதுகாப்பட்ட குடிநீர் வினியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் எறையூர் சர்க்கரை ஆலையை நவீனப்படுத்தி, ஆலையின் அறவைத்திறன் மேம்படுத்தப்படும், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கல்குவாரிகள் ஒழுங்குப்படுத்தப்படும் என்றார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நி‌ஷாபார்த்திபன், மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், எறையூர் சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகி அஸ்லம், திட்ட இயக்குனர் தெய்வநாயகி, மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக பொறியாளர் சுப்ரமணியன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story