மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி யூனியன் தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது - முறைகேடு நடந்ததாக கனிமொழி எம்.பி. சாலை மறியலால் பரபரப்பு + "||" + Kovilpatti Union President post AIADMK Acquired Alleged irregularities MP Kanimozhi Road blockade

கோவில்பட்டி யூனியன் தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது - முறைகேடு நடந்ததாக கனிமொழி எம்.பி. சாலை மறியலால் பரபரப்பு

கோவில்பட்டி யூனியன் தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது - முறைகேடு நடந்ததாக கனிமொழி எம்.பி. சாலை மறியலால் பரபரப்பு
தி.மு.க. கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக இருந்த நிலையில் கோவில்பட்டி யூனியன் தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது. இதில் முறைகேடு நடந்ததாக கனிமொழி எம்.பி. சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில்பட்டி, 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது. இதில் கோவில்பட்டி யூனியனில் உள்ள 19 வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்கள் 8 வார்டுகளிலும், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 5 வார்டுகளிலும், தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் தலா ஒரு வார்டிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

பின்னர் கோவில்பட்டி யூனியன் தலைவர், துணைத்தலைவர் ஆகியோரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் கடந்த 11-ந்தேதி நடத்த ஏற்பாடு செய்தனர். அப்போது தி.மு.க. கூட்டணி சார்பில் 11 ஒன்றிய கவுன்சிலர்களும், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 9 ஒன்றிய கவுன்சிலர்களும் யூனியன் அலுவலகத்துக்கு வந்தனர்.

ஆனால், கோவில்பட்டி யூனியன் தேர்தல் நடத்தும் அலுவலரான ஜெயசீலனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதையடுத்து மறைமுக தேர்தல் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து கோவில்பட்டி யூனியன் தலைவர், துணைத்தலைவர் ஆகியோரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நேற்று கோவில்பட்டி யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட உதவி இயக்குனர் (ஊராட்சி) உமாசங்கர் தேர்தல் நடத்தும் அலுவலராகவும், உதவி தேர்தல் அலுவலர்களாக மல்லிகா, ரீனா, கனகராஜ், வசந்தா ஆகியோரும் செயல்பட்டனர்.

காலை 11 மணிக்கு கோவில்பட்டி யூனியன் தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் வாக்களிப்பதற்காக அ.தி.மு.க. கூட்டணி சார்பில் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்கள் 5 பேரும், தே.மு.தி.க. ஒன்றிய கவுன்சிலர் ஒருவரும், சுயேச்சை கவுன்சிலர்கள் பழனிசாமி, சண்முககனி, அன்புக்கரசி ஆகிய 3 பேரும் என மொத்தம் 9 பேர் வந்தனர்.

இதேபோன்று தி.மு.க. கூட்டணி சார்பில் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்கள் 8 பேரும், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய கவுன்சிலர் ஒருவரும், சுயேச்சை கவுன்சிலர் செந்தில் முருகனும் என மொத்தம் 10 பேர் வந்தனர்.

கோவில்பட்டி யூனியன் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் 3-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் கஸ்தூரியும், தி.மு.க. சார்பில் 9-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பூமாரியும் வேட்புமனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலர்கள் 19 பேரும் தனித்தனியாக வாக்குச்சீட்டுகளில் தங்களது வாக்கினை பதிவு செய்து, வாக்குப்பெட்டியில் செலுத்தினர். பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் அ.தி.மு.க. வேட்பாளரான கஸ்தூரி 10 வாக்குகளையும், தி.மு.க. வேட்பாளரான பூமாரி 9 வாக்குகளையும் பெற்றனர். இதையடுத்து அ.தி.மு.க. வேட்பாளர் கஸ்தூரி, கோவில்பட்டி யூனியன் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக, தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசங்கர் அறிவித்து, அதற்கான சான்றிதழை வழங்கினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி ஒன்றிய கவுன்சிலர்கள், யூனியன் அலுவலக கூட்ட அரங்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிய கவுன்சிலர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

இதையடுத்து தி.மு.க. கூட்டணி ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினர், கோவில்பட்டி-பசுவந்தனை ரோடு வக்கீல் தெரு சந்திப்பு பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

இதற்கிடையே, தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், ஒன்றிய செயலாளர் முருகேசன் உள்ளிட்டவர்கள், கோவில்பட்டி யூனியன் அலுவலக கூட்ட அரங்குக்கு சென்று, அங்கிருந்த தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசங்கரிடம் மறுவாக்குப்பதிவு நடத்துமாறு முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கனிமொழி எம்.பி. கூறுகையில், “தி.மு.க. கூட்டணி ஒன்றிய கவுன்சிலர்கள் 10 பேர் தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களித்தபோது, அ.தி.மு.க. வேட்பாளர் எப்படி வெற்றி பெற முடியும்?. எனவே, தேர்தலை நியாயமான முறையில் நடத்துவதற்கு மறுவாக்குப்பதிவை நடத்துங்கள். தேர்தலுக்கு முன்பாகவே கோவில்பட்டி யூனியன் தலைவராக அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறி வந்தார். எனவே, இதில் முறைகேடுகள் நிகழ்ந்து உள்ளன“ என்று கூறினார்.

அதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசங்கர் கூறுகையில், “மறைமுக தேர்தல் முறையாக நடத்தப்பட்டு உள்ளது. மறுவாக்குப்பதிவு நடத்தும் அதிகாரம் தனக்கு இல்லை. எனவே, கோர்ட்டில் சென்று முறையிட்டு தீர்வு காணுங்கள்“ என்று கூறினார்.

இதையடுத்து கனிமொழி எம்.பி. உள்ளிட்ட அனைவரும் அங்கிருந்து சென்று, கோவில்பட்டி-பசுவந்தனை ரோடு வக்கீல் தெரு சந்திப்பு பகுதியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். மதியம் 12.30 மணி அளவில் கொளுத்தும் வெயிலில் சாலையில் அமர்ந்து கனிமொழி எம்.பி., கீதாஜீவன் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

உடனே மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் மற்றும் அதிகாரிகள், சாலைமறியலில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி. உள்ளிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக சாலையில் அமர்ந்து இருந்த கனிமொழி எம்.பி. பின்னர் சாலையோர கடையின் முன்பு படிக்கட்டில் அமர்ந்து இருந்து போராட்டத்தில் பங்கேற்றார். பின்னர் மாலை 4 மணியளவில் அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பு நிலவியது.