தூத்துக்குடியில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி புனித அன்னாள் செவிலியர் கல்லூரியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் செவிலியர் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. தொடர்ந்து தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். விழாவில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-
தேசிய அளவில் ஒவ்வொரு ஜனவரி 30-ந் தேதி தொழுநோய் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1948-ம் ஆண்டு முதல் தொழு நோய்க்கு மருந்து வழங்கப்படுகிறது. 1955-ம் ஆண்டு தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டு டாப்சோன் மாத்திரைகள் வழங்கப்பட்டது. 1982-ம் ஆண்டு முதல் முக்கூட்டு திட்ட அடிப்படையில் தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் இந்திய அளவில் 10 ஆயிரம் பேருக்கு 132 பேர் தொழுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது, நோய் கட்டுப்படுத்தப்பட்டு, 10 ஆயிரம் பேருக்கு 0.69 என்ற அளவிலும் தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆயிரம் பேருக்கு 0.021 ஆகவும் குறைந்து உள்ளது.
தற்போது இந்தியாவில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 745 பேர் தொழுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 3 ஆயிரத்து 318 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 பேரும் தொழுநோய் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கிறது. செருப்புகள், ஊனதடுப்பு உபகரணங்கள், ஊன்றுகோல்கள், நரம்பு பயிற்சி சாதனங்கள் உள்ளிட்டவைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. தொழுநோயை ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டால் ஊனத்தை தவிர்க்க முடியும் இரண்டு வார காலம் நமது மாவட்டத்தில் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடு வீடாக சென்று களப்பணி ஆய்வும் செய்யப்படுகிறது. பொதுமக்களும் தொழுநோய் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தூத்துக்குடி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குகர் சியாமளா, மருத்துவ பணிகள் துணை இயக்குனர் (தொழுநோய்) யமுனா, தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குனர் கிருஷ்ணலீலா, மருத்துவ பணிகள் துணை இயக்குனர் (குடும்பநலம்) பொன்இசக்கி, துணை இயக்குனர் (காசம்) சுந்தரலிங்கம், கல்லூரி முதல்வர் மகதலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story