அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ‘கொரோனா’ வைரஸ் பாதிப்புக்கு சிறப்பு வார்டு


அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ‘கொரோனா’ வைரஸ் பாதிப்புக்கு சிறப்பு வார்டு
x
தினத்தந்தி 30 Jan 2020 11:00 PM GMT (Updated: 30 Jan 2020 9:09 PM GMT)

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சீனாவில் இருந்து வேலூர் திரும்பிய மருத்துவ மாணவர் உள்பட 2 பேர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

வேலூர், 

சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் உலக முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க சீனாவில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சீனாவில் இருந்து இந்தியா வருபவர்களை விமான நிலையத்தில் வைத்து தீவிர பரிசோதனை நடத்தப்படுகிறது.

அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருந்தால் மருத்துவ கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சீனாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் நபர்கள் குறித்த பெயர் மற்றும் விவரங்கள் அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி வேலூர் கஸ்பாவை சேர்ந்த மருத்துவ மாணவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சீனாவில் இருந்து சென்னை வழியாக வேலூருக்கு வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மருத்துவ அதிகாரிகள் அவரின் வீட்டுக்கு சென்று தீவிர பரிசோதனை செய்தனர். அதில், மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்தது. இருந்தாலும் அவரை வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளனர். மேலும் மாணவரின் உடல்நிலையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், உடனடியாக தங்களை தொடர்பு கொள்ளுமாறு அவரது குடும்பத்தினரிடம் கூறினர். 24 மணி நேரமும் கண்காணிக்க செவிலியர் ஒருவர் பணி அமர்த்தப்பட்டுள்ளார்.

இதேபோன்று வேலூர் வட்டாரத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் சீனாவில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு வேலூர் வந்தார். அவருடைய வீட்டுக்கு மருத்துவ அதிகாரிகள் சென்று பரிசோதனை செய்தனர். அதில், அவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. எனினும் அந்த தொழிலாளியும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 படுக்கை வசதி கொண்ட வார்டில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் தயாராக உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story