சந்தை மதிப்பில் நிலத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி மண் சட்டி ஏந்தி விவசாயிகள் போராட்டம்


சந்தை மதிப்பில் நிலத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி மண் சட்டி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2020 4:00 AM IST (Updated: 31 Jan 2020 2:39 AM IST)
t-max-icont-min-icon

உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிக்காக கையகப்படுத்திய நிலத்திற்கு சந்தை மதிப்பில் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் மண் சட்டி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கலெக்டர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர், 

மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் ஆகியவை இணைந்து கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் விளைநிலங்களின் வழியாக உயர் மின் கோபுரங்களை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.

கேரளாவில் சாலையோரம் கேபிள் வழியாகவும், சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் நிலத்தடியில் கேபிள் வழியாகவும் இதுபோன்ற திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர் மின் கோபுர பாதை அமைத்து மின்சாரம் கொண்டு சென்றால், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த திட்டத்திற்கு விவசாயிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கிடையே உயர்மின் கோபுர திட்டம் பல்லடம் அருகே செம்மிபாளையம் கிராமம் வழியாக செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தங்களது விளைநிலத்திற்கு இழப்பீடு தொகையை அதிகப்படுத்தி தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் பவர்கிரிட் நிறுவனம் சார்பில் நடந்த பணிகளை விவசாயிகள் தடுத்து நிறுத்தி பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் இந்த உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

மண் சட்டி ஏந்தி போராட்டம்

அப்போது இழப்பீடு தொகை சந்தை மதிப்பில் வழங்கக்கோரி விவசாயிகள் பலர் தங்களது கைகளில் மண் சட்டியை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நுழைவு வாயிலில் இருந்து கலெக்டர் அலுவலகம் முன்பு வரை கைகளில் மண் சட்டியை ஏந்தியபடியும், இந்த திட்டத்திற்கு எதிராகவும், இழப்பீட்டை சந்தை மதிப்பில் வழங்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து போலீஸ் துணை கமிஷனர் பத்ரி நாராயணன், உதவி போலீஸ் கமிஷனர்கள் வெற்றி வேந்தன் (வடக்கு), நவீன்குமார் (தெற்கு) மற்றும் தெற்கு தாசில்தார் மகேஷ்வரன் உள்ளிட்டவர்கள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதற்கிடையில் கலெக்டர் வரும் வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து அங்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாகுல் அமீது மற்றும் துணை கலெக்டர் விஷ்ணுவர்தினி ஆகியோர் விவசாயிகளை பேச்சுவார்த்தையில் ஈடுபட அழைத்தனர். அதன்படி சில விவசாயிகள் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

முன்னதாக போராட்டத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் காமராஜ், தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சண்முகம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் ஈஸ்வரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி.) சின்னுசாமி, தற்சார்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பொன்னையன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தேவராஜ், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோபி உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். பெண்களும் பலர் பங்கேற்றனர். விவசாயிகளின் போராட்டம் காரணமாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அரசாணையில் திருத்தம்

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

2013-ம் ஆண்டு புதிய நிலம் எடுப்பு சட்டப்படி நிலத்தின் சந்தை மதிப்பை கலெக்டர் நிர்ணயம் செய்ய வேண்டும். தற்போதைய மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும். மின்கம்பி செல்லும் இடத்திற்கு தற்போது உள்ள 20 சதவீதம் இழப்பீட்டை 80 சதவீதமாக உயர்த்த வேண்டும். கோபுரம் அமையும் இடம் மற்றும் திட்டப்பாதை போக மீதி உள்ள நிலத்திற்கு 50 சதவீதம் இழப்பீடு வழங்கிடும் வகையில் அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்.

திட்டப்பாதைக்குள் வரும் கிணறு, ஆழ்குழாய் கிணறு, வீடுகள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை மனு கொடுத்துள்ளோம்.

மீண்டும் போராட்டம்

எங்கள் மனு தொடர்பாக சென்னை தலைமை செயலகத்திற்கு சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாகவும், பிற மாவட்டங்களில் வழங்கப்படும் இழப்பீடு தொகைகள் குறித்து கேட்டறிந்து இழப்பீடு தொகை உயர்த்தி தருவதற்கான வழிகள் இருந்தால், அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது கலைந்து சென்றுள்ளோம். இழப்பீடு தொகை உயர்த்தப்படாவிட்டால் மீண்டும் போராட்டங்கள் குறித்து ஆலோசனை செய்து போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story