கார் டிரைவர் கொலை-கொள்ளை வழக்கில் 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை - திருச்சி கோர்ட்டு தீர்ப்பு


கார் டிரைவர் கொலை-கொள்ளை வழக்கில் 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை - திருச்சி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 31 Jan 2020 4:00 AM IST (Updated: 31 Jan 2020 2:39 AM IST)
t-max-icont-min-icon

கார் டிரைவர் கொலை-கொள்ளை வழக்கில் 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

திருச்சி,

திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது35). இவர் தனது சொந்த காரை வாடகைக்கு ஓட்டும் வேலை செய்து வந்தார். முசிறி தாலுகா பொன்னாங்கன்னி பட்டியை சேர்ந்தவர்கள் யுவராஜ் (20), சுரேஷ் (24). நண்பர்களான இவர்கள் வேலை எதுவும் இன்றி ஊர் சுற்றி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 4-7-2014 அன்று ரமேஷ் துறையூர் பஸ் நிலையம் அருகில் உள்ள வாடகை கார் நிறுத்தும் இடத்தில் தனது காருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது யுவராஜும், சுரேசும் ரமேசிடம் செல்போனில், உடல் நலமில்லாத தங்களது உறவினரை பார்ப்பதற்காக சின்னசேலம் பட்டிக்கு செல்ல வாடகைக்கு கார் வேண்டும் என பேசினார்கள்.

இதை உண்மை என நம்பிய ரமேஷ் காரை ஓட்டிக்கொண்டு துறையூர் அம்மாபட்டி பிரிவு ரோட்டிற்கு வந்தார். அந்த காரில் யுவராஜும், சுரேசும் ஏறிக்கொண்டனர். சின்னசேலம் பட்டி நோக்கி கார் சென்று கொண்டிருந்த போது சிறுநீர் கழிக்கவேண்டும் என்று சுரேஷ் காரை நிறுத்தும்படி கூறினார்.

ரமேஷ் காரை நிறுத்தியதும் 2 பேரும் சேர்ந்து ரமேசின் கழுத்தில் கயிற்றால் இறுக்கி அவரை கொலை செய்தனர். பின்னர் இந்த கொலைைய மறைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ரமேஷ் உடலை ஏற்றிக்கொண்டு யுவராஜ் காரை ஓட்டினார். கண்ணனூர் அருகே மருக்கலாம்பட்டி என்ற இடத்தில் உள்ள ஒரு பாலத்தின் அடியில் ரமேஷ் உடலை மறைத்து வைத்து விட்டு அவர் வைத்திருந்த ரூ.3 ஆயிரம் பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு காரையும் கடத்தி சென்றனர்.

இந்த கொலை, கொள்ளை தொடர்பாக துறையூர் போலீசார் யுவராஜையும், சுரேசையும் கைது செய்து திருச்சி மூன்றாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி கர்ணன் விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட யுவராஜுக்கும், சுரேசுக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும், தலா ரூ.2,500 அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆஜராகி வாதாடினார்.

Next Story