தனவேலு எம்.எல்.ஏ.வை தகுதி நீக்கம் செய்யவேண்டும் - சபாநாயகரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடிதம்
தனவேலு எம்.எல்.ஏ.வை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடிதம் கொடுத்தனர்.
புதுச்சேரி,
பாகூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் தனவேலு எம்.எல்.ஏ. இவர் ஆளுங்கட்சியில் இருந்துகொண்டே அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார்.
முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களையும் தெரிவித்தார். இதையடுத்து கட்சியிலிருந்து தனவேலு இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அரசுக்கு எதிராக தனது ஆதரவாளர்களை திரட்டி தனவேலு எம்.எல்.ஏ. ஊர்வலம் நடத்தினார். அப்போது முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவர்னர் கிரண்பெடியிடம் கடிதம் கொடுத்தார்.
இந்தநிலையில் நேற்று காங்கிரஸ் மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமையில் அரசு கொறடா அனந்தராமன், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், ஜான்குமார், விஜயவேணி ஆகியோர் சபாநாயகரை சந்தித்து பேசினார்கள்.
அப்போது அரசு கொறடா அனந்தராமன், தனவேலு எம்.எல்.ஏ.வை தகுதிநீக்கம் (எம்.எல்.ஏ. பதவியை பறிக்க) செய்யவேண்டும் என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து அனந்தராமன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2016-ல் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது பாகூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனவர் தனவேலு. அவர் தொடர்ந்து கட்சி விரோத, ஆட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார். ஆட்சியை கலைக்க எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து சதி செயல்களில் ஈடுபட்டுவந்தார். எனவே அரசு கொறடா என்ற முறையில் அவரை தகுதி நீக்கம் செய்ய சபாநாய கரிடம் மனு கொடுத்து உள்ளேன்.
தனவேலு எம்.எல்.ஏ. கவர்னரை சந்தித்தபோதுகூட எதிர்க்கட்சியினருடன் சென்றுதான் மனு அளித்து உள்ளார். அப்போது இந்த ஆட்சியை முடிக்க கூறியுள்ளார். அவர் கட்சிக்கட்டுப்பாடு, அரசு கொறடாவின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுகிறார்.
எனவே கட்சி மேலிடத்தின் ஒப்புதலின்பேரில் சட்டமன்ற விதிகள் பிரிவு 10-ன்கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளேன். அவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story