கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்; மந்திரி சபை ஒப்புதல்


கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்; மந்திரி சபை ஒப்புதல்
x
தினத்தந்தி 31 Jan 2020 5:26 AM IST (Updated: 31 Jan 2020 5:26 AM IST)
t-max-icont-min-icon

கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த மராட்டிய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

மும்பை,

முந்தைய தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாரதீய ஜனதா அரசு கிராம பஞ்சாயத்து தலைவர்களை நேரடியாக வாக்காளர்களே தேர்வு செய்யும் முறையை கொண்டு வந்தது. தற்போதைய சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு இந்த முறையை மாற்றி கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களே, பஞ்சாயத்து தலைவரைதேர்ந்தெடுப்பார்கள் என்று அறிவித்தது.

மாநில அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 9 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள் தீர்மானம் நிறைவேற்றின. இருப்பினும் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தலை கொண்டு வருவது தொடர்பான தீர்மானத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில், கிராம வளர்ச்சித்துறை கொண்டு வந்தது. இந்த தீர்மானம் விவாதிக்கப்பட்டு, அதற்கு மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

இது தொடர்பாக விரைவில் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துஉள்ளது. எனவே இனி கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், தங்களுக்குள் ஒருவரை தலைவராக தேர்வு செய்து கொள்வார்கள்.

கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல் நடத்துவதால், தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் தான் மறைமுக தேர்தலை நடத்த அரசு விரும்புவதாகவும் சமீபத்தில் கிராம வளர்ச்சி மந்திரி ஹசன் முஸ்‌ரீப் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story