மந்திரிசபை விரிவாக்கம் குறித்து மேலிட தலைவர்களுடன் ஆலோசிக்க எடியூரப்பா டெல்லி சென்றார்
மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக மேலிட தலைவர்களுடன் ஆலோசிக்க முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லி புறப்பட்டு சென்றார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. மந்திரி சபையில் 16 இடம் காலியாக உள்ளது. இந்த இடங்கள், பா.ஜனதா ஆட்சி அமைய காரணமாக இருந்த காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இதற்கிடையே 15 தொகுதிகளுக்கு சட்டசபை இடைத்தேர்தல் நடந்தது. இதில் 12 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றது. இதில் 11 எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்க எடியூரப்பா முடிவு செய்தார். அதுபோல் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த எச்.விஸ்வநாத், எம்.டி.பி.நாகராஜ் ஆகியோருக்கும் மந்திரி பதவி வழங்க அவர் திட்டமிட்டு உள்ளார்.
ஆனால் இதற்கு பா.ஜனதா மேலிடம் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் மந்திரி சபை விரிவாக்கம் தள்ளிப்போவதாக சொல்லப்படுகிறது. இடைத்தேர்தல் முடிந்து 50 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படாததால், மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி எடியூரப்பா மீது அதிருப்தியில் இருந்து வருகின்றனர். மந்திரி பதவிக்காக பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களும் எடியூரப்பாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பேசுவதற்காகவும், இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேருக்கு மந்திரி பதவி வழங்கலாம் என்பது குறித்து பேசவும் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று காலையில் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
டெல்லியில் ஜே.பி.நட்டா, அமித்ஷாவை சந்தித்து பேசி மந்திரிசபை விரிவாக்கத்திற்கு அனுமதி பெற்றுவிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) பெங்களூருவுக்கு எடியூரப்பா திரும்ப உள்ளார். பா.ஜனதா மேலிட தலைவர்கள் அனுமதி அளித்தால் இன்று அல்லது நாளை(சனிக்கிழமை) மந்திரிசபை விரிவாக்கம் நடை பெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லிக்கு புறப்பட்டு செல்வதற்கு முன்னதாக மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி பெங்களூரு விதானசவுதாவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலையின் கீழ் வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு முதல்-மந்திரி எடியூரப்பா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-
மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துைற மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேச டெல்லிக்கு செல்கிறேன். அவர்கள் 2 பேரும் நேரம் ஒதுக்கி கொடுத்துள்ளனர். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஜே.பி.நட்டா, அமித்ஷாவுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்படும். நாளையே (அதாவது இன்று) மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுமா? என்று நீங்கள் (நிருபர்கள்) கேட்கிறீர்கள். மந்திரிசபை விரிவாக்கம் 99 சதவீதம் முடிந்துள்ளது.
கட்சி மேலிட தலைவர்களை சந்திக்க டெல்லி செல்வதால், பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து பேச அனுமதி கேட்டுள்ளேன். அதனால் பிரதமரையும் சந்தித்து பேச உள்ளேன்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
இதற்கிடையில், மந்திரிசபை விரிவாக்கம் நடைபெற உள்ளதால் மந்திரி பதவிக்காக கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து பேச பா.ஜனதா மூத்த தலைவர்களும் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர். காலப்பா ஆச்சார், கே.ஜி.போப்பையா, சி.பி.யோகேஷ்வர் உள்ளிட்டோர் மந்திரி பதவிக்காக ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச டெல்லியில் தங்கி உள்ளனர்.
இவர்களில் காலப்பா ஆச்சாருக்கு மந்திரி பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 எம்.எல்.ஏ.க் கள் மற்றும் உமேஷ் கட்டி, அரவிந்த் லிம்பாவளி, காலப்பா ஆச்சார் என ஒட்டு மொத்தமாக 12 பேருக்கு மந்திரி பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story