கழிவுநீர் கால்வாய்களை முழுமையாக தூர்வார வேண்டும்; மேயர் கவுதம்குமார் உத்தரவு


கழிவுநீர் கால்வாய்களை முழுமையாக தூர்வார வேண்டும்; மேயர் கவுதம்குமார் உத்தரவு
x
தினத்தந்தி 1 Feb 2020 3:45 AM IST (Updated: 31 Jan 2020 11:34 PM IST)
t-max-icont-min-icon

கழிவுநீர் கால்வாய்களை முழுமையாக தூர்வார வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயர் கவுதம்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு, 

பெங்களூரு மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மேயர் கவுதம்குமார் பேசும்போது கூறியதாவது:-

பெங்களூருவில் அதிகளவில் குப்பைகள் சேருகின்றன. இந்த குப்பைகளை சரியாக நிர்வகிப்பது இல்லை என்று புகார்கள் தொடர்ந்து வருகின்றன. குப்பைகளை அகற்றும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மட்டுமின்றி, உயர் அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் குப்பை பிரச்சினையை முழுமையாக தீர்க்க முடியும்.

ராஜராஜேஸ்வரிநகரில் கடைகளுக்கு உரிமம் வழங்கி அதன் மூலம் மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்க வேண்டும். இந்த விஷயத்தில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். ராஜராஜேஸ்வரிநகரில் மொத்தம் 184 பூங்காக்கள் உள்ளன. அவற்றில் 110 பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் 74 பூங்காக்களை மேம்படுத்த வேண்டியுள்ளது. அந்த பகுதியில் 2.53 லட்சம் கட்டிடங்கள் சொத்துவரி வளையத்திற்குள் வந்துள்ளன. அங்கு ரூ.274 கோடி வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை ரூ.165 கோடி வரி வசூலாகியுள்ளது.

ரூ.3 கோடி செலவில் பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கோடை காலத்தில் டேங்கர் லாரிகள் மூலம் பூங்காவில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றப்படும். கழிவுநீர் கால்வாய்களை முழுமையாக தூர்வார வேண்டும். மேலும் ஏற்கனவே நடைபெற்று வரும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

இவ்வாறு கவுதம்குமார் கூறினார்.

Next Story