அந்தியூரில் பரபரப்பு: டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்


அந்தியூரில் பரபரப்பு: டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 Feb 2020 3:45 AM IST (Updated: 1 Feb 2020 12:44 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

அந்தியூர், 

அந்தியூர் புதுப்பாளையம் வெள்ளைபிள்ளையார் கோவில் அருகே புதிய டாஸ்மாக்கடை அமைக்க அதிகாரிகள் இடம் தேர்வு செய்திருந்தார்கள். இதைத்தொடர்ந்து லாரியில் மதுபாட்டில்கள் கொண்டுவரப்பட்டன. நேற்று காலை கடை திறக்கப்படுவதாக இருந்தது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் புதிய டாஸ்மாக் கடை அமைக்கப்படும் இடத்துக்கு திரண்டு வந்தார்கள். பின்னர் அந்தியூர்-பர்கூர் ரோட்டில் சாலை மறியலுக்கு முயன்றார்கள்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்கள். பிறகு மறியலுக்கு முயன்ற பொதுமக்களை சாலையோரமாக அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசாரிடம் பொதுமக்கள், "குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பது முறையா? இங்கு கடை அமைக்க கூடாது" என்றார்கள். அதற்கு இன்ஸ்பெக்டர் ரவி டாஸ்மாக் அதிகாரிகளிடம் பேசி கடை இங்கு திறக்கவிடாமல் செய்கிறோம் என்று உறுதி அளித்தார். அதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்கள்.

போராட்டத்தை கைவிட்ட பிறகும் சுமார் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் எங்கே மதியத்துக்கு பிறகு டாஸ்மாக் கடையை திறந்துவிடுவார்களோ? என்று கடை வாசலிலேயே நின்று தர்ணாவில் ஈடுபட்டார்கள்.

டாஸ்மாக் கடை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்துக்கு எதிரே அந்தியூர் வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. அதனால் விவசாயிகளும் டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

Next Story