கடந்த ஆண்டு ரூ.2¾ கோடியில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் வழங்கப்பட்டது - கலெக்டர் ரத்னா தகவல்
அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.2¾ கோடி மானியத்தில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்தார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வேளாண் எந்திரங்களையும், அதன் பயன்பாட்டையும் மாவட்ட கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். இதில் கீழப்பழுவூர், காரைப்பாக்கம் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு தலா ரூ.2.5 லட்சம் மானியத்திலும் மற்றும் இலந்தைக்கூடம் கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவருக்கு ரூ.4.11 லட்சம் மானியத்திலும் வழங்கப்பட்டுள்ள வேளாண் எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
அப்போதுகலெக்டர் கூறுகையில், தமிழக அரசின் சார்பில் விவசாயிகள் விவசாயம் செய்ய வேளாண் பொறியியல் துறையின் மூலம் உழவு எந்திரம், பவர் டில்லர், வைக்கோல் கட்டும் கருவி போன்ற எந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு 8 முதல் 80 குதிரைத்திறன் வரை உள்ள உழவு எந்திரங்கள், பவர்டில்லர் மற்றும் இதர பண்ணைக் கருவிகள் உள்ளிட்ட 194 வேளாண் கருவிகள் ரூ.2 கோடியே 73 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் உழவு எந்திரம், பவர்டில்லர் மற்றும் இதர பண்ணைக் கருவிகள் மானிய விலையில் பெற்றுக்கொள்ள விருப்பம் உள்ள சிறு, குறு விவசாயிகள், அவர்களின் ஆதார் எண், சிட்டா அடங்கல், சிறு, குறு விவசாயி என்ற சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் முதலான ஆவணங்களைக் கொண்டு, அரசின் இணையதளமான www.agrimachinery.nic.in-ல் பதிவு செய்து மானியம் பெற்று பயனடையலாம் என்றார்.
அப்போது விவசாயிகள் தங்களுக்கு மானியத்தில் வழங்கப்பட்டுள்ள வேளாண் கருவி மூலம் நாங்கள் சொந்த நிலங்களில் குறைந்த செலவில் வேளாண்மை செய்து அதிக லாபம் பெற முடிகிறது என்றனர்.
ஆய்வின் போது, செயற்பொறியாளர் எட்வின் பார்லி, உதவிப்பொறியாளர் நெடுமாறன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story