சென்னை, கரூரில் உள்ள செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. வீடு, அலுவலகத்தில் அதிரடி சோதனை
போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜியின் சென்னை, கரூரில் உள்ள வீடு, அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
கரூர்,
தற்போது அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருக்கும் செந்தில் பாலாஜி கடந்த 2011 - 2016-ம் ஆண்டில் அ.தி.மு.க.வில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2015-ம் ஆண்டு அவருக்கு எதிராக சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரில், செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம் ரூ.1 கோடியே 62 லட்சம் மோசடி செய்துவிட்டதாக புகார் செய்யப்பட்டது. பின்னர் சென்னை ஐகோர்ட்டு பரிந்துரையின் பேரில் போலீசார் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தனர். இதையடுத்து செந்தில்பாலாஜி, பாஸ்கர் கேசவன் உள்பட 12 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக சென்னை ஐகோர்ட்டில் செந்தில்பாலாஜி கடந்த 2017-ம் ஆண்டு முன்ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். அவருக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த மோசடி வழக்கு எந்தவித முன்னேற்றம் எதுவும் இல்லாமல் இருந்தது.
இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான அருண்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், எழும்பூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் செந்தில்பாலாஜி மற்றும் வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்கள் பெயர்கள் இடம் பெறவில்லை. எனவே உரிய முறையில் விசாரணை நடத்திட உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
அவருடைய மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், செந்தில்பாலாஜி மீதான மோசடி வழக்கை உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும். 6 மாதத்துக்குள் மீண்டும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கடந்த நவம்பர் மாதம் 27-ந்தேதி உத்தரவிட்டனர்.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவையடுத்து செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை மந்தைவெளி திருவேங்கடம் தெருவில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டுக்கு நேற்று வந்தனர். வீட்டில் யாரும் இல்லாமல் பூட்டி கிடந்தது.
இதையடுத்து அவருடைய வீட்டுக்கு போலீசார் சீல் வைத்தனர். நீதிமன்றத்தில் அனுமதி பெற்று செந்தில் பாலாஜி வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டனர்.இந்த வழக்கின் விசாரணைக்காக கரூரில் உள்ள செந்தில்பாலாஜியின் வீடு, அவரது உறவினர் வீடு, அலுவலகம் உள்ளிட்டவற்றில் சோதனையிடுவதற்கு கோர்ட்டில் வாரண்டை பெற்ற மத்திய குற்றப்பிரிவு போலீசார், துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான குழுவுடன் நேற்று காலை கரூர் வந்தனர்.
பின்னர் காலை 7 மணியளவில் ராமேஸ்வரப்பட்டியிலுள்ள செந்தில்பாலாஜியின் பூர்வீக வீட்டிற்கு சென்றனர். வீட்டில் கட்டுமான பணி நடந்து வருவதால் சுற்றிலும் மறைவுக்காக துணி கட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் விசாரித்து வீட்டினுள் போலீசார் சென்றனர். அப்போது அங்கு செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. இல்லாததால் அவரது தாய் பழனியம்மாள் விவரங்களை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் வீடு முழுவதும் தீவிர சோதனையை மேற்கொண்டனர்.
அப்போது முக்கிய ஆவணங்கள் ஏதும் இருக்கிறதா? என தேடிப்பார்த்தனர். இதற்கிடையே இது குறித்து அறிந்ததும் தி.மு.க.வினர் வீட்டு முன்பு திரண்டனர். அப்போது சோதனைக்கு கண்டனம் தெரிவித்தும், இது ஆளுங்கட்சியின் பழிவாங்கும் நடவடிக்கை. அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கான நட வடிக்கையாக உள்ளது எனக்கூறி அ.தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து வாங்கல் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.தொடர்ந்து உறவினர் ஒருவரை வீட்டுக்குள் அனுமதிக்கக்கோரி தி.மு.க.வினர் கோஷமிட்டதால் பெண் ஒருவர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டார். காலை 10 மணியளவில் சாப்பாடு பொட்டலம் வீட்டினுள் கொடுத்து அனுப்பப்பட்டது. அதனை தீவிரமாக சோதித்த பிறகே உள்ளே போலீசார் அனுமதித்தனர். தொடர்ந்து நீண்ட நேரமாக நடந்து வந்த சோதனை பகல் 12 மணியளவில் நிறைவு பெற்றது. இந்த சோதனை தொடர்பான அறிக்கையை செந்தில்பாலாஜியின் வக்கீல் கேட்டறிந்து பெற்று கொண்டார்.
இதேபோல் கரூர் ராமகிருஷ்ணபுரம் மேற்கு 2-வது கிராஸ் பகுதியில் உள்ள செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் என்பவரது வீட்டிலும் தொடர் சோதனையை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டனர். ராமகிருஷ்ணபுரம் மெயின்ரோட்டில் செந்தில்பாலாஜியின் பராமரிப்பில் இருந்த அலுவலகத்தில் நீண்டநேரமாக கதவை திறக்க விடாமல் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக, மதியம் 1.30 மணியளவில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் உள்ளே புகுந்து அங்கு தொடர் சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத பணம் ஏதும் கைப்பற்றப்பட்டதா? என்பது பற்றி போலீசார் பதிலளிக்க மறுத்துவிட்டனர். மாறாக இந்த சோதனை அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என போலீசார் தெரிவித்தனர். செந்தில்பாலாஜியின் வீடு, அலுவலகம் மற்றும் செந்தில்பாலாஜி தம்பி வீடு ஆகிய 3 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்ட சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story