படித்த பெண்கள் வீடுகளில் முடங்காமல் வேலைக்கு செல்ல வேண்டும் - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு
படித்த பெண்கள் வீடுகளில் முடங்கிப்போகாமல் தரமான வேலைக்கு செல்ல வேண்டும் என சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி சிவகங்கை அரசு மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மணி கணேஷ் வரவேற்று பேசினார். விழாவில் அமைச்சர் பாஸ்கரன் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சியினை தொடங்கி வைத்து பேசியதாவது:-
மாணவிகள் பலர் படித்து முடித்து வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். நாங்கள் கிராமங்களில் சென்று பார்க்கும் போது பல பெண்கள் என்ஜினீயரிங் படித்துள்ளதாக கூறுகின்றனர். தற்போது ஏராளமான வேலை வாய்ப்புகள் பத்திரிகை மற்றும் செல்போன்களில் வருகின்றன. அவற்றில் தரமான வேலைகளுக்கு செல்ல அவர்கள் முயற்சி செய்ய வேண்டும்.
பெண்களை முன்னேற்றுவதற்காக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் அதிக அளவில் பெண்கள்தான் கவுன்சிலர்களாக உள்ளனர். அந்த அளவிற்கு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவே நீங்கள் இதை பயன்படுத்தி வாழ்க்கையில் உயர்வடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, வழிகாட்டும் கையேட்டினை அமைச்சர் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சந்திரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் வழிகாட்டும் நிலைய உதவி இயக்குனர் கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராஜலெட்சுமி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story