முறைகேடாக இயங்கி வந்த 24 பிரிண்டிங் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிப்பு
திருப்பூர் பகுதிகளில் முறைகேடாக இயங்கி வந்த 24 பிரிண்டிங் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பூர்,
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் ஆடைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
இதுபோல் சாய, சலவை ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் ஏராளமானவை செயல்பட்டு வருகின்றன. இவை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுத்தான் இயங்க வேண்டும். ஆனால் அனுமதி பெறாமலும், முறைகேடாகாகவும் இயங்கி வருகிற சாய, சலவை ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் விவசாய நிலங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் திறந்து விட்டு விடுகின்றன.
இதன் காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. நீர்நிலைகளில் சாயக்கழிவுநீர் திறந்துவிடப்படுவதால், நீர்நிலைகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக நொய்யல் ஆறு, ஜம்மனை ஓடை உள்ளிட்ட பகுதியில் சாயக்கழிவுநீர் அடிக்கடி திறந்து விடப்பட்டு வந்தன. இந்நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இதன் காரணமாக தற்போது இந்த சம்பவங்கள் குறைந்து வந்தது.
இருப்பினும் திருப்பூர் பகுதியில் முறைகேடாக பிரிண்டிங் நிறுவனங்கள் பல இயங்குவதாகவும், இந்த நிறுவனங்கள் அடிக்கடி பிரிண்டிங் கழிவுகளை பல்வேறு பகுதிகளில் கொட்டி வருவதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் காரணமாக இதனை கண்டுபிடிக்க வடக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி செந்தில் விநாயகம் தலைமையில், உதவி பொறியாளர்கள் லாவண்யா, பாரதிராஜா, முரளி ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த சில நாட்களாக திருப்பூர் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது முறைகேட்டில் ஈடுபட்டு வந்த 24 பிரிண்டிங் நிறுவனங்களின் மின் இணைப்பு நேற்று ஒரே நாளில் துண்டிக்கப்பட்டது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி செந்தில்குமார் கூறியதாவது:-
திருப்பூர் பகுதிகளில் பல பிரிண்டிங் நிறுவனங்கள் அனுமதி பெறாமலும், முறைகேடாகவும் இயங்கி வருவதாக வந்த தகவலின் பேரில் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு ஆண்டிபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்தது.
இதில் முறைகேட்டில் ஈடுபட்ட பெரியாயிபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணா கார்மெண்ட்ஸ், காலேஜ் ரோட்டில் உள்ள சன்சயா பிரிண்டிங், பெரியாயிபாளையத்தை சேர்ந்த புளுஸ்டார் பிரிண்டிங் பார்க், பாரப்பாளையத்தில் உள்ள நவின் பிரிண்டர்ஸ், பாரப்பாளையம் ஸ்ரீ வேலவன் ஆர்ட்ஸ், எம்.எஸ்.நகர் பேஷன் லேண்ட் கார்மென்ஸ், காலேஜ்ரோடு விவின் பிரிண்டிங், இடுவம்பாளையம் அக்டிங் பிரிண்டிங், காசிபாளையம் கலர் டிரைவ் பிரிண்டிங் உள்பட வீரபாண்டி, போயம்பாளையம், பலவஞ்சிபாளையம் உள்பட மொத்தம் 24 பிரிண்டிங் மற்றும் சலவை நிறுவனங்கள் முறைகேடாக இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. இதன் பேரில் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதன் பின்னர் நேற்று ஒரே நாளில் 24 பிரிண்டிங் மற்றும் சலவை ஆலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மேலும், முறைகேடாக இயங்கி வந்த பிளாஸ்டிக் தயாரிப்பில் ஈடுபட்ட 2 நிறுவனங்களின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒருமுறை தவறு செய்த நிறுவனங்கள் மீண்டும் அதே தவறை செய்தால், கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை எந்த நேரத்திலும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். அதிகாரிகளின் சோதனை தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story