வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரித்த பின்னரும் அரசின் நலத்திட்டங்கள் எளிதில் கிடைப்பதில்லை - விவசாயிகள் குற்றச்சாட்டு
வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரித்த பின்னரும் அரசின் நலத்திட்டங்கள் எளிதில் கிடைப்பதில்லை என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
வேலூர்,
வேலூர் மாவட்ட அளவில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. வேளாண் இணை இயக்குனர் சங்கர் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிப்பாளர் திருகுண அய்யப்பதுரை மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில், வேலூர் மாவட்டத்ைத சேர்ந்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவித்தனர்.
அதன் விவரம் வருமாறு:-
பள்ளிகொண்டா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மும்முனை மின்சாரம் வழங்கும்பணி கடந்தாண்டு தொடங்கப்பட்டது. 3 மாதங்களில் பணி முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் இன்னும் பணிகள் முடிவடையவில்லை. அகரம்சேரி ஆறு பாலாற்றில் கலக்கும் வெட்டுவாணம் பகுதியில் தடுப்பணை கட்டினால் மோர்தானா கால்வாய்க்கு தண்ணீரை திருப்பி விடலாம். இதன்மூலம் பொய்கை, விரிஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்வது அதிகரித்து வருகிறது. எனவே உழவர் சந்தைகளில் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் காய்கனிகளை விற்பனை செய்ய தனி இடம் ஒதுக்கித்தர வேண்டும். சதுப்பேரி ஏரி கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. மாவட்டம் 3-ஆக பிரிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் எளிதில் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி எதுவும் கிடைக்கவில்லை எனக் குற்றம் சாட்டினர். 100 நாள் வேலை திட்டப்பணிகளால் விவசாயத்துக்கு ஆட்கள் கிடைக்கவில்லை. எனவே 100 நாள் வேலை திட்டத்தை நிறுத்த வேண்டும். சொட்டுநீர் பாசனத்துக்கு அரசு சார்பில் வழங்கப்படும் உபகரணங்கள் தனியாரை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. வறட்சியால் பாதித்த தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்த அதிகாரிகள், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பண்ணை குட்டை அமைத்தல், எருக்குழி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வறட்சியால் காய்ந்துபோன மரங்களை வெட்டுவதற்கும், புதிய தென்னை மரக்கன்றுகள் நடவும் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு இழப்பீடு தொகை எதுவும் வழங்கப்படாது. விவசாயிகளின் கோரிக்கைகள், குறைகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த மாதம் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story