தஞ்சை அருகே தோப்பில் பதுங்கி இருந்த கூலிப்படை தலைவன் உள்பட 5 பேர் கைது
தஞ்சை அருகே தோப்பில் பதுங்கி இருந்த கூலிப்படை தலைவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் அதிரடி வேட்டையில் அவர்கள் சிக்கினர்.
திருக்காட்டுப்பள்ளி,
நெல்லையை சேர்ந்த கூலிப்படையினர் தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள ராயமுண்டான்பட்டியில் உள்ள ஒரு தோப்பில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆகியோரது உத்தரவின் பேரில் குற்ற விசாரணைப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், இன்ஸ்பெக்டர் சக்திகுமார் ஆகியோருடன் தஞ்சை போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ராயமுண்டான்பட்டியில் உள்ள ஒரு தோப்பில் இருந்த மோட்டார் பம்புசெட் அறையில் பதுங்கி இருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அப்போது அவர்கள் நெல்லையை சேர்ந்த கூலிப்படை தலைவன் நெட்டூர் கண்ணன், புலி என்ற முத்துசாமி, செல்வகுமார், தஞ்சை கல்விராயன்பேட்டையை சேர்ந்த லோகநாதன் மற்றும் ராயமுண்டான்பட்டியை சேர்ந்த வீரமணி என்பது தெரிய வந்தது. இதையடுத்து 5 பேரையும் பூதலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பூதலூர் போலீசார் அவர்களை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட கூலிப்படை தலைவனான நெட்டூர் கண்ணன் மீது 22 வழக்குகள் உள்ளன. இதில் 5 கொலை வழக்கும், 10 கொலை முயற்சி வழக்குகளும் அடங்கும். 5 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான். இதேபோல் புலி என்ற முத்துசாமி மீதும் கொலை, கொலை முயற்சி உள்பட 21 வழக்குகளும், செல்வகுமார் மீது 5 வழக்குகளும் உள்ளன. தஞ்சையை சேர்ந்த லோகநாதன் மீது கடத்தல் வழக்கு உள்ளது.
லோகநாதன் சிறையில் இருந்த போது கூலிப்படை தலைவன் உள்ளிட்டவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் நண்பர்களாகினர். இதன் அடிப்படையில் அவர்களை தஞ்சைக்கு வரவழைத்து லோகநாதன் தங்க வைத்துள்ளார்.
இவர்கள் இங்கு தங்கி இருந்து ெநல்லையில் சதித்திட்டத்தை அரங்கேற்ற இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Related Tags :
Next Story