மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு எம்.எல்.ஏ.க்களை அழைக்க வேண்டும்; குமரி கலெக்டரிடம், மீனவர்கள் வலியுறுத்தல்
மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு எம்.எல்.ஏ.க்களை அழைக்க வேண்டும் என்று குமரி கலெக்டரிடம் மீனவர்கள் வலியுறுத்தினர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, மீன்வளத்துறை துணை இயக்குனர் இளம்வழுதி, உதவி இயக்குனர்கள் மோகன்ராஜ், கோபிநாத், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் நெய்தல் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் பெர்லின், இணைச்செயலாளர் விமல்ராஜ், ஜெயசுந்தரம், உள்நாட்டு மீனவர் சங்க பிரதிநிதி அந்தோணி, மணக்குடி அலெக்சாண்டர், இனயம்புத்தன்துறை பஞ்சாயத்து தலைவர் மேரி மல்லிகா, கடியப்பட்டணம் பங்கு தந்தை பபியான்ஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மீனவர்கள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் பேசும்போது கூறியதாவது:-
தேசிய கடல் மீன்பிடி புதிய மசோதா குறித்து மீனவர்களிடம் முழுமையாக கருத்து கேட்ட பின்னரே நிறைவேற்ற வேண்டும். மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் பல இடங்களில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மேற்கொண்ட ஆய்வுகள், ஒதுக்கிய நிதிகள், பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கடற்கரை கிராமங்களில் பல இடங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். புற்றுநோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறும்பனையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். குறும்பனை பஞ்சாயத்தை தனி பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும். தமிழக அரசின் மீன்வளத்துறையை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு விடுத்து பங்கேற்க செய்ய வேண்டும். சட்டம் இயற்றும் இடத்துக்கு செல்லக்கூடியவர்கள் இந்த கூட்டத்துக்கு வந்தால் எங்களது கோரிக்கைகளை சட்டசபையில் அவர்கள் எடுத்து வைக்க உதவியாக இருக்கும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
அதற்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே பதில் அளித்து பேசினார். அப்போது புற்றுநோய் பாதிப்பு குறித்து உடனடியாக எதுவும் கூற முடியாது. இதுதொடர்பாக வல்லுனர் குழு மட்டுமே ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க முடியும். எனவே வல்லுனர் குழு ஆய்வு நடத்த அரசிடம் பரிந்துரை செய்யப்படும். கடற்கரை கிராமங்களில் சாலை வசதி, குடிநீர் வசதிகள் செய்ய உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடலரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவற்றை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த கூட்டத்தில் ஒரு மீனவர் மக்களை அழிக்கக்கூடிய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டிப்பதாக கூறி பேச முயன்றார். உடனே கலெக்டர் பிரசாந்த் வடநேரே, இதை நீங்கள் வெளியில் தான் பேச வேண்டும். இந்த பிரச்சினை தொடர்பாக இங்கு பேச அனுமதிக்க மாட்டேன் என்றார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story