மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் - ரூ.800 கோடி பரிவர்த்தனை பாதிப்பு


மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் - ரூ.800 கோடி பரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 1 Feb 2020 3:45 AM IST (Updated: 1 Feb 2020 3:39 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.800 கோடி பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல், 

வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். எனினும், அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

இதனால் நாடு முழுவதும் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. இதையடுத்து மத்திய தலைமை தொழிலாளர் நல ஆணையர், வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து ஏற்கனவே அறிவித்தபடி நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 310 வங்கி கிளைகள் செயல்படுகின்றன. இவற்றில் அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட மொத்தம் 1,700 பேர் நேற்று பணிக்கு வரவில்லை. மேலும் திண்டுக்கல் சாலை ரோட்டில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதில் வங்கி ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதற்கிடையே அதிகாரிகள் உள்பட யாருமே வராத வங்கிகள் காலை 10.30 மணிக்கு பூட்டப்பட்டது. இதனால் திண்டுக்கல் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வங்கிகள் மூடிக்கிடந்தன. அதேநேரம் ஏராளமான வாடிக்கையாளர்கள் வழக்கம்போல் காசோலையை மாற்றுதல், பணம் செலுத்துதல், வரைவோலை பெறுதல் உள்ளிட்ட பணிகளுக்காக வங்கிகளுக்கு வந்தனர்.

அப்போது வங்கிகள் பூட்டிக்கிடந்ததை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக வங்கிகளில் பண பரிவர்த்தனை முற்றிலும் பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை நூற்பாலைகள், தொழிற்சாலைகள், பெரிய வர்த்தக நிறுவனங்கள், கமிஷன் மண்டிகள் ஏராளமான உள்ளன.

இதனால் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் உள்பட முக்கிய ஊர்களில் உள்ள வங்கிகளில் பண பரிவர்த்தனை அதிகமாக இருக்கும். அவை அனைத்தும் நேற்று பாதிக்கப்பட்டன. இதன்மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.800 கோடி அளவுக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதாக வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Next Story