10-ம் வகுப்பு மாணவி தற்கொலை: பள்ளிக்கூடம் முன் 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்

10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக பள்ளிக்கூடம் முன்பு 2-வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள், செங்கல்சூளை தொழிலாளி. இவருடைய 2-வது மகள் பேச்சியம்மாள் (வயது 15). இவர் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள குழந்தை ஏசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் அரையாண்டு தேர்வில் பேச்சியம்மாள் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் ஆசிரியைகள் திட்டியதாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு காலையில் பள்ளிக்கு வந்த பேச்சியம்மாள் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். பின்னர் வீட்டில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த செய்துங்கநல்லூர் போலீசார், பேச்சியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை நடத்தி உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள், அந்த பள்ளிக்கூடம் முன்பு திரண்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பேச்சியம்மாளை திட்டிய ஆசிரியைகள் மற்றும் பள்ளிக்கூட நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில் நேற்று பேச்சியம்மாளின் உறவினர்கள், ஊர் மக்கள் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டனர். பேச்சியம்மாள் சாவுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அவர்களில் ஒருசிலர் பேச்சியம்மாள் படித்த பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். அங்கு பள்ளிக்கூட நுழைவு வாசல் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் பள்ளிக்கூடத்துக்்்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டனர். ஆனால் அவர்கள் ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தால் மட்டுமே செல்வோம் என்று கூறி தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கலைந்து செல்ல மறுத்த 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story