கயத்தாறு அருகே பயங்கரம்: கார் டிரைவர் குத்திக்கொலை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கயத்தாறு அருகே கார் டிரைவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கயத்தாறு,
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சூரியமினிக்கனில் இருந்து திருமங்கலகுறிச்சிக்கு செல்லும் சாலையில் ஒத்தவீடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான கொய்யாமரத் தோட்டம் உள்ளது. நெல்லையைச் சேர்ந்த விஜயகுமாருக்கு சொந்தமான இந்த தோட்டத்தில், சூரியமினிக்கனைச் சேர்ந்த செல்லையா காவலாளியாக வேலை செய்து வருகிறார்.
நேற்று மதியம் இந்த தோட்டத்தில் சாலையோர தடுப்பு கம்பிவேலி அருகில் புதருக்குள் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளி செல்லையா, இதுகுறித்து தோட்ட உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பத்மாவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்டவரின் உடலை தடயவியல் நிபுணர் கலா லட்சுமி ஆய்வு செய்தார். அப்போது அவரது உடலில் கழுத்து, மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. மேலும் அவரது காலில் கம்பால் தாக்கியதற்கான காயமும் இருந்தது.
எனவே, அவரை மர்ம நபர்கள் கத்தியால் சரமாரியாக குத்தியும், கம்பால் அடித்தும் கொலை செய்தது தெரியவந்தது. கொலை செய்யப்பட்டவரின் உடலுக்கு அருகில் செல்போனும் கிடந்தது. மேலும் அவரது செருப்புகளும் சாலையோரத்தில் தனியாக கிடந்தன.
போலீசாரின் விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர், கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் கம்மாபட்டியைச் சேர்ந்த மில்டன் ராஜ் (வயது 40) என்பது தெரியவந்தது. இவர் வாடகை கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ராணி. இவர்களுடைய மகன் அமிஷன் (8), அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ராணி தன்னுடைய கணவரிடம் கோபித்துக்கொண்டு, அப்பகுதியில் உள்ள தன்னுடைய பெற்றோரின் வீட்டுக்கு மகனுடன் சென்று விட்டார்.
இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி மில்டன் ராஜ் கயத்தாறு அருகே வெள்ளாளங்கோட்டையில் நடந்த கிறிஸ்தவ ஆலய திருவிழாவுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிச்சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வராமல் மாயமானார். எனவே, மில்டன் ராஜ் வெளியூருக்கு வாடகை காரில் சவாரி சென்று இருக்கலாம் என்று பெற்றோர் கருதினர். இந்த நிலையில் மில்டன் ராஜ் கொலை செய்யப்பட்டது தெரியவந்து உள்ளது. மில்டன் ராஜை கொலை செய்த மர்மநபர்கள், சாலையில் இருந்து அவரது உடலை எடுத்து சென்று தோட்டத்துக்குள் வீசிச்சென்றுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட மில்டன் ராஜின் உடலை மோப்பம் பிடித்த மோப்ப நாய் ‘ஜூடு‘, சாலையோரத்தில் கிடந்த மில்டன்ராஜின் செருப்புகள் வரையிலும் ஓடிச்சென்று நின்றது. அது யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. மில்டன்ராஜின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.மில்டன்ராஜை கொலை செய்த கொலையாளிகள் யார்? அவரை எதற்காக கொலை செய்தனர்? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story