வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம், கோவையில் ரூ.500 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு
கோவையில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.500 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
கோவை,
20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 650 வங்கி கிளைகள் உள்ளன. இதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் நேற்று பணிக்கு வரவில்லை. இதனால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதன்காரணமாக வங்கிக்கு வந்த வியாபாரிகள், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவை ரெயில்நிலையம் அருகே உள்ள ஒரு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கி பேசியதாவது:-
மத்திய அரசுடன் கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்படாததால் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து வருகிற 11,12,13 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டமும் நடத்தப்பட உள்ளது.
எனவே மத்திய அரசு அதிகாரிகளின் வேலை நேரத்தை வரன்முறைப்படுத்த வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் என்பதன் அடிப்படையில் ஒப்பந்த ஊழியர்களுக்கும் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும். ஓய்வுக்கால பலன்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனாட்சி சுப்பிரமணியன், ராஜவேலு, சுந்தரவடிவேலு, சசீதரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் கோவை மாவட்டத்தில் ரூ.500 கோடி பண பரிவர்த்ததனை பாதிக்கப்பட்டு உள்ளது. ஏ.டி.எம். எந்திரங்களில் வைக்கப்பட்டிருந்த பணத்தை பொதுமக்கள் அதிகமாக எடுத்து வருகின்றனர். இதன்காரணமாக ஒருசில ஏ.டி.எம்.களில் பணம் தீர்ந்து விட்டது.
இதனால் பணம் இருந்த ஏ.டி.எம்.களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கபடும் அபாயம் உள்ளது.
Related Tags :
Next Story