கிருஷ்ணகிரியில், வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் வங்கி ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி,
மும்பையில் நடந்த ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையில் வங்கி ஊழியர்கள் கோரிக்கையான 20 சதவீத ஊதிய உயர்வுக்கு, வங்கி நிர்வாக தரப்பிலிருந்து 13.5 சதவீதம் தான் வழங்க முடியும் என கூறியது. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால், 9 சங்கங்களை உள்ளடக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் அறைகூவலுக்கு இணங்க, 10 லட்சம் வங்கி ஊழியர்கள் நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரியில் மார்க்கெட் சாலையில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கி எதிரில் அனைத்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க உதவி பொதுச்செயலாளர் சந்தோஷ் தலைமை தாங்கினார். இந்திய வங்கி அதிகாரிகள் சங்க செயலாளர் பாலமுருகன், ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க செயலாளர் அசோக்குமார், இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொறுப்பாளர் ஹரிராவ், இந்திய வங்கி ஊழியர் சங்க உதவி செயலாளர் சந்துரு, ராஜேந்திரன் ஆகியோர் கண்டனவுரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். வாரம் 5 நாட்கள் வேலை நாட்களாக இருக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு பென்ஷன் ஒவ்வொரு ஒப்பந்தத்தின் போதும் உயர்த்தப்பட வேண்டும். குடும்ப பென்ஷன் உயர்த்தப்பட வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.
வேலை நேரத்தை முறைப்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும். வங்கிகள் இணைப்பினை நிறுத்த வேண்டும். வாடிக்கையாளர்களுக்கான சேவை கட்டணங்கள் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் பொன் மகாராஜா நன்றி கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சுமார் 130 வங்கி கிளைகளை சேர்ந்த, 2000 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். அரசு வங்கிகள் அனைத்தும் நேற்று செயல்படவில்லை. இன்றும் (சனிக்கிழமை) செயல்படாது. தொடர்ந்து நாளை (ஞாயிறுக்கிழமை) விடுமுறை என்பதால், ஏ.டி.எம்.களில் பணம் கிடைக்காத நிலை ஏற்படும்.
Related Tags :
Next Story