குடியுரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய பள்ளிக்கூடம் மீது தேசத்துரோக வழக்கு; காங்கிரஸ் வலியுறுத்தல்
குடியுரிமை சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய பள்ளிக்கூடம் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
மும்பை,
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த சட்டத்துக்கு ஆதரவாக அண்மையில் மும்பை மாட்டுங்காவில் உள்ள தயானந்த் தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு அந்த சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக மராட்டிய அரசு விசாரணைக்கும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தின் பீதர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு நாடகம் நடத்திய ஷகீன் என்ற பள்ளியில் தலைமை ஆசிரியை மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த நிலையில், மும்பையில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய பள்ளி மீதும் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக மராட்டிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சச்சின் சாவந்த் கூறியதாவது:- குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடகத்தை நடத்தியதற்காக பள்ளி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய முடியும் என்றால் மும்பையில் அந்த சட்டத்துக்கு ஆதரவாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய பள்ளி நிர்வாகம் மற்றும் அமைப்பாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story