காதல் தகராறில், வாலிபரை அடித்து கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை - கடலூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


காதல் தகராறில், வாலிபரை அடித்து கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை - கடலூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 31 Jan 2020 10:15 PM GMT (Updated: 1 Feb 2020 12:08 AM GMT)

கடலூர் அருகே காதல் தகராறில் வாலிபரை அடித்து கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.

கடலூர், 

கடலூர் அருகே உள்ள தூக்கணாம்பாக்கம் குட்டியாங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணாயிரம் மகன் அருள்(வயது 27). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் தூக்கணாம்பாக்கம் மேட்டுத்தெருவை சேர்ந்த ரகு என்பவரின் தங்கையை காதலித்தார்.

சம்பவத்தன்று ரகு வீட்டின் அருகே அருள் நின்று கொண்டிருந்தார். இதை பார்த்த ரகு, அருளிடம் தட்டி கேட்டபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த ரகு, இவரது சித்தப்பா முருகன்(41), சித்தி ராஜகுமாரி(34) ஆகிய 3 பேரும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் அருளை அடித்து கொன்றனர்.

இது குறித்து அருளின் அண்ணன் ராஜா(31) கொடுத்த புகாரின் பேரில் தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகு, முருகன், ராஜகுமாரி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக கடலூர் மாவட்ட முதலாவது கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த சம்பவம் கடந்த 11.4.2016 அன்று நடந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட் டது.

இதில் குற்றவாளிகளான ரகு, முருகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும், ராஜகுமாரிக்கு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பளித்தார். இதையடுத்து ரகு, முருகன், ராஜகுமாரி ஆகிய 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story