ஆசிரியர்களுக்கு நடத்துவதைபோல் கல்வித்துறை ஊழியர்களுக்கு மாதந்தோறும் குறைதீர் கூட்டம்


ஆசிரியர்களுக்கு நடத்துவதைபோல் கல்வித்துறை ஊழியர்களுக்கு மாதந்தோறும் குறைதீர் கூட்டம்
x
தினத்தந்தி 1 Feb 2020 10:45 PM GMT (Updated: 1 Feb 2020 4:15 PM GMT)

ஆசிரியர்களுக்கு நடத்துவதை போல் கல்வித்துறை ஊழியர்களுக்கு மாதந்தோறும் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூர்,

கரூர் மாவட்ட தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட மாநாடு கரூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பாண்டிகண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் லெனின், சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில பொதுச் செயலாளர் பொன்.ஜெயராம் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட செயலாளர் லட்சுமணன் ஆண்டறிக்கையை வாசித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

கூட்டத்தில், கடந்த ஆண்டு நடந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் கலந்து கொண்ட 5,800-க்கும் மேற்பட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையினை முற்றிலுமாக கைவிட வேண்டும். கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந்தேதிக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஊழியர்களிடமிருந்து மாத ஊதியத்தில் 10 சதவீதம் தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் ஊழியர்களுக்கும், தமிழக அரசுக்கும் எந்தவிதத்திலும் நலன் பயக்கக்கூடியதாக இல்லை. மேலும் தமிழக அரசுக்கு கூடுதல் நிதிசுமையை ஏற்படுத்தக்கூடிய திட்டம் ஆகும். எனவே ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த பயனளிப்பு ஓய்வூதியத்திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்திட வேண்டும்.

கல்வித்துறை ஊழியர்களுக்கு குறைதீர் கூட்டம்

தமிழக அரசு உடனடியாக 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி வரை 21 மாதங்களுக்கான நிலுவை ஊதியம் வழங்கிட வேண்டும். ஆசிரியர்களுக்கு நடத்துவதைபோல், கல்வித்துறை ஊழியர்களின் குறைகளை தீர்க்க மாதந்தோறும் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். பள்ளி விடுமுறை நாட்களில் பணியாளர்களை வரவழைத்து வேலை வாங்குவதை தடுக்க வேண்டும். தற்போது ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ். திட்டத்தின்கீழ் சம்பளம் போடுவது உள்ளிட்டவற்றுக்காக பட்டியல்கள் தயாரிக்க மென்பொருள் சரியாக ஒத்துழைக்காத நிலையில் ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதில் உள்ள அனைத்து குளறுபடிகளையும் களைந்து முழுவடிவில் இந்த திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். அதுவரை பழைய முறையிலேயே பட்டியல்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநிலத்தலைவர் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் ரமே‌‌ஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story