அமைப்புசாரா தொழிலாளர்கள், சுயதொழில் புரிவோர், வணிகர்கள் மத்திய அரசின் சிறப்பு ஓய்வூதிய திட்டங்களில் சேர்ந்து பயன் பெறலாம் - கலெக்டர் தகவல்


அமைப்புசாரா தொழிலாளர்கள், சுயதொழில் புரிவோர், வணிகர்கள் மத்திய அரசின் சிறப்பு ஓய்வூதிய திட்டங்களில் சேர்ந்து பயன் பெறலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 Feb 2020 4:15 AM IST (Updated: 1 Feb 2020 10:10 PM IST)
t-max-icont-min-icon

அமைப்புசாரா தொழிலாளர்கள், சுயதொழில் புரிவோர், வணிகர்கள் மத்திய அரசின் சிறப்பு ஓய்வூதிய திட்டங்களில் சேர்ந்து பயன்பெறலாம் என்று வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.

வேலூர்,

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பிரதம மந்திரியின் ஓய்வூதிய திட்டம் மற்றும் வணிகர்கள், சுய தொழில் புரிபவர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டம் குறித்த விளக்கக்கூட்டம் நடந்தது. தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு) ஆனந்தன், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் பழனி, வருங்கால வைப்புநிதி உதவிஆணையர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்துக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது:-

இந்தியாவில் 42 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அமைப்புசாரா தொழிலாளர்களாக உள்ளனர். வீட்டு வேலை செய்வோர், நிலமற்ற விவசாய தொழிலாளர்கள், பீடி சுற்றுபவர்கள், கைத்தறி தொழிலாளர்கள், தோல் பதனிடும் தொழில் செய்பவர்கள் உள்ளிட்டோர்களுக்கு பிரதம மந்திரியின் ஓய்வூதிய திட்டம் மத்திய அரசின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் சேர அமைப்புசாரா தொழிலாளர்களின் மாத வருமானம் ரூ.15 ஆயிரத்துக்கு குறைவாகவும், 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். மாதந்தோறும் சந்தா செலுத்தினால் 60 வயதுக்கு பின்னர் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியமாக கிடைக்கும். சம்பந்தப்பட்ட நபர் இறந்து விட்டால் 60 வயதுக்கு பின்னர் அவருடைய கணவர் அல்லது மனைவிக்கு 50 சதவீதம் தொகை குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

இதேபோன்று வணிகர்கள் மற்றும் சுயதொழில் புரிபவர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் சேருபவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.1½ கோடிக்கு குறைவாகவும், 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும், மாதந்தோறும் சந்தா செலுத்தினால் 60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். சம்பந்தப்பட்ட தொழிலாளர் மரணம் அடைந்தால் 60 வயதுக்கு பிறகு அவருடைய கணவர் அல்லது மனைவிக்கு 50 சதவீத தொகை குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் பதிவு செய்து 60 வயதுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட நபர் திடீரென இறந்து விட்டால், அவருடைய கணவர் அல்லது மனைவி தொடர்ந்து சந்தா செலுத்தலாம். 18 வயது நிரம்பியவர்கள் மாதந்தோறும் ரூ.55-ம், 40 வயது நிரம்பியவர்கள் மாதந்தோறும் ரூ.200-ம் செலுத்த வேண்டும். அதே அளவிலான 50 சதவீத தொகையை மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு மாதமும் பயனாளியின் கணக்கில் செலுத்தப்படும். வயது வாரியாக சந்தா தொகை செலுத்துவதில் மாற்றம் உள்ளது. மத்திய அரசின் இந்த சிறப்பு திட்டங்களில் அமைப்புசாரா தொழிலாளர்கள், வணிகர்கள், சுயதொழில் புரிபவர்கள் சேர்ந்து பயன் பெறலாம்.

மேலும் இதுகுறித்து, எல்.ஐ.சி. அலுவலகங்கள், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம், தொழிலாளர்கள் ஈட்டுறுதி நிறுவன அலுவலகம், மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகங்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கலெக்டர் பிரதம மந்திரியின் ஓய்வூதிய திட்டம், தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். இதில், அமைப்புசாரா தொழிலாளர்கள், வணிகர்கள், வியாபாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story