17 பேருக்கும் மந்திரி பதவி வழங்க வேண்டும்; எம்.டி.பி.நாகராஜ் வலியுறுத்தல்
பா.ஜனதா ஆட்சி அமைய காரணமாக இருந்த 17 பேருக்கும் மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று எம்.டி.பி.நாகராஜ் வலியுறுத்தினார்.
பெங்களூரு,
முன்னாள் மந்திரி எம்.டி.பி.நாகராஜ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர்ந்தார். அவர் கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் ஒசக்கோட்டை தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு சுயேச்சை வேட்பாளர் சரத் பச்சேகவுடாவிடம் தோல்வி அடைந்தார்.
அவர் தான் தோல்வி அடைந்திருந்தாலும் பரவாயில்லை, தனக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரியிடம் கேட்டுள்ளார். தோல்வி அடைந்தவர்களுக்கு மந்திரி பதவி கிடையாது என்று எடியூரப்பா அறிவித்துள்ளார். இந்த நிலையில் எம்.டி.பி.நாகராஜ் ஒசக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சட்டசபை இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கு மந்திரி பதவி வழங்குவது தொடர்பாக எந்த தகவலும் இல்லை என்பதை ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். பா.ஜனதா மேலிட தலைவர்களிடம் எடியூரப்பா என்ன ஆலோசனை நடத்தினார், மந்திரிசபை விரிவாக்கத்தின்போது எத்தனை பேருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்பது பற்றி எனக்கு தெரியாது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நேரில் சந்தித்து விவாதிக்க நேரம் ஒதுக்குமாறு முதல்-மந்திரியிடம் கேட்டுள்ளேன். முதல்-மந்திரியை சந்தித்து பேசிய பிறகு மந்திரிசபை விரிவாக்கம் பற்றியும், புதிய மந்திரிகள் குறித்தும் தகவல் தெரியும்.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 11 பேர் மற்றும் உமேஷ்கட்டி, அரவிந்த் லிம்பாவளி, சி.பி.யோகேஸ்வர் ஆகியோருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்ற தகவல் வந்துள்ளது. இதை தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது. ஆனால் பா.ஜனதா ஆட்சி அமைய காரணமாக இருந்த நான் உள்பட 17 பேருக்கும் மந்திரி பதவி வழங்க வேண்டும். முதல்-மந்திரி எடியூரப்பா இப்போது தான் டெல்லியில் இருந்து வந்துள்ளார். கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும். மந்திரிசபை விரிவாக்கம் செய்த பிறகு அடுத்தக்கட்ட முடிவு எடுப்பேன்.
எடியூரப்பா எங்கள் தலைவர். எங்களுக்கு பதவி வழங்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அரசியலில் ஏற்ற-இறக்கங்கள் ஏற்படுவது சகஜம். இது ஒன்றும் புதிதல்ல. கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு அமைந்ததில் யாருடைய பங்கு இருக்கிறது என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். மந்திரி பதவி குறித்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுடன் நான் ஆலோசிக்கவில்லை. செல்போனில் அவர்களை தொடர்பு கொண்டு பேசினேன்.
பச்சேகவுடா எம்.பி. தனது மகனை நிறுத்தாமல் இருந்திருந்தால் நான் தோல்வி அடைந்திருக்க மாட்டேன். அவர் எனக்கு ஆதரவு வழங்கியிருந்தால் 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பேன். அதனால் பச்சேகவுடா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். அவர் பா.ஜனதாவுக்கு துரோகம் செய்துவிட்டார்.
நான் பா.ஜனதாவில் சேர பச்சேகவுடா ஒப்புதல் வழங்கினார். அதன் பிறகு அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். அவர் எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவில்லை. இது பா.ஜனதா தலைவர்கள் அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு எம்.டி.பி. நாகராஜ் கூறினார்.
Related Tags :
Next Story