கர்நாடக மாநில புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக பிரவீன் சூட் பதவி ஏற்பு


கர்நாடக மாநில புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக பிரவீன் சூட் பதவி ஏற்பு
x
தினத்தந்தி 2 Feb 2020 4:45 AM IST (Updated: 1 Feb 2020 10:37 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநில புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக பிரவீன் சூட் பதவி ஏற்றுக் கொண்டார்.

பெங்களூரு, 

கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்தவர் நீலமணி ராஜு. இவர், நேற்றுமுன்தினத்துடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனால் போலீஸ் டி.ஜி.பி. பதவிக்கு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளான ஏ.எம்.பிரசாத், பிரவீன் சூட் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. பதவி மூப்பு அடிப்படையில் ஏ.எம்.பிரசாத், கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில், கர்நாடக மாநில புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக பிரவீன் சூட்டை நியமித்து கர்நாடக அரசு நேற்று முன்தினம் மாலையில் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதைத்தொடர்ந்து, பெங்களூரு நிருபதுங்கா ரோட்டில் உள்ள மாநில போலீஸ் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கர்நாடக மாநில புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக நேற்று முன்தினம் இரவு பிரவீன் சூட் பதவி ஏற்றுக் கொண்டார். அவரிடம் நீலமணி ராஜு பொறுப்புகளை ஒப்படைத்தார். மேலும் பிரவீன் சூட்டுக்கு, நீலமணி ராஜு வாழ்த்துகளும் தெரிவித்தார்.

புதிய டி.ஜி.பி.யாக பதவி ஏற்றுக் கொண்ட பிரவீன் சூட்டுக்கு, டி.ஜி.பி. அலுவலகத்தில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. அதனை அவர் ஏற்றுக் கொண்டார். பின்னர் பிரவீன் சூட்டுக்கு, பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட், இமாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். அவர், 1986-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரி ஆனார். 1989-ம் ஆண்டு மைசூரு உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியில் சேர்ந்தார். அதன்பிறகு பல்லாரி, ராய்ச்சூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டராகவும் பிரவீன் சூட் பணியாற்றி இருந்தார்.

பெங்களூரு போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனராகவும், பெங்களூரு சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனராகவும், பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராகவும் பிரவீன் சூட் பணியாற்றி உள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் நம்ம 100, ஒய்சாலா வாகனத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடும் திட்டம், பெண்களுக்காக இளம்சிவப்பு நிற ஒய்சாலா வாகனத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருந்தார்.

மேலும் போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக கடந்த 2011-ம் ஆண்டு ஜனாதிபதி பதக்கத்தையும் பிரவீன் சூட் பெற்றிருந்தார்.


Next Story