தர்மபுரி, ஓசூரில் ரூ.17லட்சம் குட்கா பறிமுதல் 2 டிரைவர்கள் கைது


தர்மபுரி, ஓசூரில் ரூ.17லட்சம் குட்கா பறிமுதல் 2 டிரைவர்கள் கைது
x
தினத்தந்தி 1 Feb 2020 11:00 PM GMT (Updated: 1 Feb 2020 5:39 PM GMT)

தர்மபுரி, ஓசூரில் ரூ.17 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி,

தர்மபுரி நெடுஞ்சாலை துறை ரோந்து போலீசார் தர்மபுரியில் உள்ள பென்னாகரம் ரோடு மேம்பாலம் அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை நடத்தினார்கள். அப்போது வேனில் 50 குட்கா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் குட்காவுடன் சரக்கு வேனை தர்மபுரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த வேன் டிரைவர் திருவண்ணாமலையை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 27) என்பதும், பெங்களூருவில் இருந்து கோவைக்கு குட்கா கடத்தி சென்றதும் தெரியவந்தது.

டிரைவர் கைது

இதையடுத்து புருஷோத்தமனை போலீசார் கைது செய்தனர். அந்த சரக்கு வேன் மற்றும் அதில் இருந்த குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ.15 லட்சம் என கூறப்படுகிறது. அந்த வேனின் உரிமையாளர் யார்? வேனில் குட்கா கடத்தி செல்லப்பட்டதில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓசூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் ஜூஜூவாடி அருகில் போக்குவரத்து சோதனைச்சாவடி பக்கமாக நேற்று முன்தினம இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடகா மாநிலத்தில் இருந்து வந்து கொண்டிருந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அதில், 60 மூட்டைகளில் மொத்தம், 1,394 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக லாரியை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

பறிமுதல்

அதில் அவர் பர்கூரை அடுத்த கொட்டூரை சேர்ந்த ஜெயராமன் (34) என்பதும், அவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து சென்னைக்கு தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story