தமிழக எல்லைகளில் மருத்துவக்கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை - தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் எச்சரிக்கை


தமிழக எல்லைகளில் மருத்துவக்கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை - தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 Feb 2020 4:00 AM IST (Updated: 1 Feb 2020 11:10 PM IST)
t-max-icont-min-icon

தமிழக எல்லைகளில் மருத்துவக்கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் ஜோதிமணி எச்சரிக்கை விடுத்தார்.

ஊட்டி,

திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் நிதி ஆயோக் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மனித கழிவுகளை உரமாக மாற்றி விவசாயத்துக்கு பயன்படுத்துவது குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

கருத்தரங்கை தேசிய பசுமை தீர்ப்பாய தலைவரும், முன்னாள் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியுமான ஜோதிமணி தொடங்கி வைத்து பேசினார். கருத்தரங்கில் நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர் தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் ஜோதிமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊட்டி நகராட்சி தீட்டுக்கல் குப்பை கிடங்கில் ஈக்கள், கொசுக்கள், புழுக்கள் மூலம் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக ஒருவர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தீர்ப்பாயத்தின் சார்பாக நான் மற்றும் அதிகாரிகள் குப்பை கிடங்கை பார்வையிட்டு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகத்துக்கு தெரிவித்தேன். குப்பை கிடங்கை சுற்றி சுற்றுச்சுவர், குப்பைகள் காற்றில் பறக்காமல் இருக்க கம்பி வலை, கொசுக்கள், ஈக்கள் உற்பத்தியாகாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 4 மாதங்கள் மட்டுமே வெயில் அடிக்கிறது. மற்ற மாதங்களில் மழை மற்றும் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், குப்பைகளின் ஈரத்தன்மை அதிகளவில் காணப்படுவதால் மக்குவதில் பிரச்சினை ஏற்படுகிறது. குப்பைகளை உரமாக்குவது, தரம் பிரிப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஜோசப் நியமிக்கப்பட்டு உள்ளார். நீலகிரி மட்டுமல்ல சென்னையில் செம்பரபாக்கம், பெருங்குடி ஆகிய பகுதிகளில் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என்று சட்டத்தில் உள்ளது. இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. வருங்காலத்தில் குப்பைகளை பிரிக்காமல் கொடுத்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 2 முறைக்கு மேல் இதனை செய்தால் சம்பந்தப்பட்டவருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கும் வகையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. திருச்சி போன்ற நகரங்களில் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் புகையால் வைரஸ் கிருமிகள் பரவுகிறது. இதை தடுக்க மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகள் மற்றும் கோழி இறைச்சி கழிவுகளை தமிழக எல்லையில் உள்ள நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் கொட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து எல்லை சோதனைச்சாவடிகளில் போலீசார் நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு அதிக அபராதம் மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து குப்பைகளுடன் மருத்துவ கழிவுகளை சேர்த்து வழங்கக்கூடாது.

நீலகிரி மாவட்டம் கேத்தியில் மனித கழிவுகள் மூலம் உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த உரத்தை மலைக்காய்கறி பயிர்களுக்கு பயன்படுத்தும் போது, துர்நாற்றம் அல்லது பாதிப்பு ஏதும் ஏற்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது பிரச்சினை இல்லை என்பது தெரியவந்து உள்ளது. உரத்தை இயற்கை விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். வருகிற மே மாதம் ஊட்டியில் மீண்டும் ஆய்வு செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக அவர் தீட்டுக்கல் குப்பை கிடங்கில் ஆய்வு செய்தார்.

Next Story