அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சாமி பார்வையிடும் நிகழ்ச்சி


அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சாமி பார்வையிடும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 1 Feb 2020 10:15 PM GMT (Updated: 1 Feb 2020 6:53 PM GMT)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 110 ஏக்கர் நிலத்தை அருணாசலேஸ்வரர் பார்வையிடும் நிகழ்ச்சி கலசபாக்கம் அருகே நடந்தது. அப்போது பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

கலசபாக்கம்,

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே உள்ள தனக்கோட்டிபுரம் கிராமத்தில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 110 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் அந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் குத்தகை எடுத்து நெல் பயிரிட்டு வருகின்றனர்.

ஆண்டிற்கு ஒரு முறை அருணாசலேஸ்வரர் உடனாகிய உண்ணாமலை அம்மன் தனக்கோட்டிபுரம் கிராமத்தில் உள்ள நிலத்தை பார்வையிடும் நிகழ்ச்சி நடைபெறும்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஆண்டு முழுவதும் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள வரவு, செலவு கணக்குகளை சாமி முன்பும், கிராம பொதுமக்கள் முன்னிலையிலும் கோவில் நிர்வாகிகள் படித்து காட்டினர். இதனையடுத்து நிலத்தில் விளைந்த நெற்கதிர்களை மாலையாக சாமிக்கு அணிவித்து அக்கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

மேலும் நிலத்தில் விளைந்த நெல்லை கொண்டு அரிசியாக அரைத்து அருணாசலேஸ்வரருக்கு நெய்வேத்தியத்திற்கும் மற்றும் அன்னதானத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றது. நிலத்தில் உள்ள வைக்கோல்கள் கோவில் கோசாலையில் உள்ள மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிகழ்ச்சி அக்கிராமத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலும் வீடு தோறும் அருணாசலேஸ்வரர் உண்ணாமலை அம்மனுக்கு மாலை அணிவித்து தீபாராதனை செய்யப்பட்டது. பின்னர் கலசபாக்கத்தில் நடக்கும் செய்யாற்றில் ஆற்றுத் திருவிழாவான ரதசப்தமி நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்றார்.

Next Story