கூடலூர் அருகே, ஊருக்குள் புகுந்த புலியை பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் வனத்துறையினர் மும்முரம்
கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த புலியை பட்டாசு வெடித்து விரட்டியடிக்கும் பணியில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
கூடலூர்,
கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியில் கடந்த சில வாரங்களாக புலி நடமாட்டம் உள்ளது. மேலும் விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் வளர்த்து வரும் கால்நடைகளை புலி கடித்து கொன்றது. கடந்த மாதம் 22-ந் தேதி கீச்சலூர் பகுதியில் கொட்டகையில் கட்டி வைத்திருந்த பசு மாட்டை புலி கடித்து கொன்றது. சில தினங்கள் கழித்து கொரவயல் பகுதியில் கட்டி வைத்திருந்த காளை மாட்டை புலி கடித்து இழுத்து சென்றது. நாள்தோறும் கால்நடைகளை புலி கடித்து கொன்று வருவதால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதனால் அச்சம் அடைந்த கிராம மக்கள் ஊருக்குள் புகுந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து கேமராக்களை பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். கேமராக்களில் புலியின் உருவம் பதிவான உடன் கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கேமராக்களில் புலியின் உருவம் பதியவில்லை. இதனால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி ஊராட்சிக்குட்பட்ட சேமுண்டி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் கூடலூர் சென்று விட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது புதரில் இருந்து வெளியே வந்த புலி சாலையை கடக்க முயன்றது. அப்போது காரின் சத்தம் கேட்டதால் புலி வந்த வழியாக திரும்பி சென்றது. இதைத்தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒலிப்பெருக்கிகள் மூலம் புலி நடமாட்டம் குறித்து அறிவித்தனர். கடந்த 30-ந் தேதி காலையில் சேமுண்டி பகுதியில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை கொண்டு வந்து வனத்துறையினர் பொருத்தினர்.
தொடர்ந்து புலி நடமாட்டம் குறித்து வனத்துறையினர் ஊராட்சி பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராக்களில் புலி உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்தனர்.
ஆனால் புலி குறித்த எந்த தடயமும் கிடைக்கவில்லை. இருப்பினும் புலி நடமாட்டம் உள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனால் கூடலூர் வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் மக்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் தேயிலை தோட்டங்கள், புதர்கள் நிறைந்த பகுதிகளில் புலி பதுங்கி உள்ளதா? என தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும் சிறிய சத்தம் எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடித்து வருகின்றனர். நேற்றும் பகல் முழுவதும் வனத்துறையினர் பல குழுக்களாக பிரிந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் புலி நடமாட்டம் குறித்த அறிகுறிகள் தென்படவில்லை.
இதுகுறித்து வனச்சரகர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:- பொதுமக்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் அந்தந்த பகுதியில் 9 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தினமும் கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முள்ளம்பன்றி, காட்டுப்பன்றிகளின் உருவங்கள் கேமராக்களில் பதிவாகி உள்ளது. இருப்பினும் புலியை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தேடும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருகிறது. இதனால் புதருக்குள் பதுங்கி இருந்தாலும் புலி அங்கிருந்து சென்று விடும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவில் ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story