கயத்தாறு அருகே, கார் டிரைவர் கொலையில் நண்பர் கைது - பரபரப்பு வாக்குமூலம்
கயத்தாறு அருகே கார் டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
கயத்தாறு,
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு இலந்தைகுளம் கம்மாபட்டியைச் சேர்ந்தவர் தேவசகாயம் மகன் மில்டன் ராஜ் (வயது 40). கார் டிரைவரான இவர் கயத்தாறு அருகே சூரியமினிக்கனில் இருந்து திருமங்கலகுறிச்சி செல்லும் சாலையில் ஒத்தவீடு பகுதியில் உள்ள கொய்யா மரத்தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு, உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மில்டன் ராஜை அவருடைய நண்பரான அதே ஊரைச் சேர்ந்த மிக்கேல் அந்தோணி மகன் விஜயன் (32) கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து விஜயனை போலீசார் கைது செய்தனர்.
கைதான விஜயன் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நான் கொத்தனாராக வேலை செய்து வருகிறேன். என்னுடைய மனைவி வெண்ணிலா. எங்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நானும், மில்டன் ராஜிம் நண்பர்கள். மில்டன் ராஜ் தன்னுடைய மனைவி, மகனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அவர் வேலை இல்லாத நாட்களில், என்னுடன் கட்டிட வேலைக்கு வருவார். அப்போது மில்டன் ராஜிக்கும், என்னுடைய மனைவி வெண்ணிலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
மில்டன் ராஜ், என்னுடைய மனைவியுடன் உல்லாசமாக இருந்ததை செல்போனில் வீடியோ படம் எடுத்துள்ளார். பின்னர் அதனை என்னுடைய மனைவியிடம் காண்பித்து மிரட்டி, தொடர்ந்து பல முறை உல்லாசமாக இருந்து வந்தார். இதனை அறிந்த நான் என்னுடைய மனைவியை கண்டித்தேன். பின்னர் எனக்கு துரோகம் செய்த மில்டன் ராஜை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினேன்.
அதன்படி கடந்த 25-ந் தேதி இரவில் வெள்ளாளங்கோட்டை கிறிஸ்தவ ஆலய திருவிழாவுக்கு செல்வோம் என்று கூறி, மில்டன் ராஜை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றேன். அப்போது மில்டன் ராஜிக்கு அளவுக்கு அதிகமாக மது வாங்கி குடிக்க கொடுத்தேன். பின்னர் அவரை சூரிய மினிக்கனில் இருந்து திருமங்கலகுறிச்சி செல்லும் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்றேன்.
பின்னர் அங்கு கிடந்த கம்பால் மில்டன் ராஜை சரமாரியாக தாக்கினேன். ஆனாலும் ஆத்திரம் தீராத நான் அங்கு கிடந்த பெரிய கல்லை எடுத்து வந்து, மில்டன் ராஜின் மார்பில் தூக்கிப்போட்டு கொலை செய்தேன். பின்னர் அவரது உடலை சாலையோர தோட்டத்தில் புதருக்குள் வீசிச் சென்றேன்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story