வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம் - ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு
ஊதிய உயர்வு வழங்கக்கோரி நெல்லையில் வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது.
நெல்லை,
வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நேற்று முன்தினம் முதல் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் வங்கி பணிகள் முடங்கின. வங்கியில் காசோலை மூலம் நடைபெறக்கூடிய பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 280 வங்கி கிளைகளில் பணியாற்றும் ஊழியர்களும் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டு இருந்தன. சில வங்கிகள் திறந்து இருந்தன. ஆனால் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. சில வங்கிகளில் மேலாளர்கள், உதவி மேலாளர்கள் வந்து இருந்தனர். ஆனால் வங்கி காசோலை பண பரிவர்த்தனைகள் நடைபெறவில்லை.
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி பணிகள் பாதிக்கப்பட்டன. நெல்லை மாநகர பகுதியில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம்.களில் நேற்று காலை முதல் பணம் இல்லை. இதனால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர். நெல்லை சந்திப்பு, ரெயில்நிலையம், பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம்.களில் மதியம் பணம் இல்லை.
இந்த வேலைநிறுத்தத்தையொட்டி, பாளையங்கோட்டையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரெங்கன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story