சீனாவில் இருந்து வந்த ஜோலார்பேட்டை மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை - வட்டார மருத்துவ அலுவலர் தகவல்
சீனாவில் இருந்து வந்த ஜோலார்பேட்டை மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என்று வட்டார மருத்துவ அலுவலர் சுமதி கூறினார்.
ஜோலார்பேட்டை,
சீனாவில் மருத்துவம் படித்து வரும் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு மாணவர் நேற்று முன்தினம் விமானம் மூலம் பெங்களூரு வழியாக ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.
இதேபோல ஜோலார்பேட்டையை அடுத்த புத்துக்கோயில் பகுதியை சேர்ந்த மாணவர் சீனாவில் 4-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இவர், சில நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் கொல்கத்தா வழியாக வீட்டிற்கு திரும்பினார்.
இந்த மாணவர்களுக்கு விமான நிலையத்தில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என சான்று வழங்கி அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் பி.சுமதி தலைமையில், மருத்துவ குழுவினர் டாக்டர் பிரசாத், சுகாதார ஆய்வாளர் கோபி மற்றும் சுகாதார செவிலியர்கள், பணியாளர்கள் சீனாவில் இருந்து வந்த 2 மருத்துவ மாணவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று விமான நிலையத்தில் வழங்கிய சான்றிதழ்களை சரி பார்த்தனர்.
அதில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என உறுதிப்படுத்தினர். இருப்பினும் 2 மாணவர்களும் 14 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், ஏதாவது காய்ச்சல், வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் 2 பேரும் 24 மணி நேரமும் சுகாதார செவிலியர்களால் கண்காணிக்கப்படுவார்கள்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பி.சுமதி நிருபர்களிடம் கூறுகையில், ‘சீனாவில் இருந்து வந்த 2 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை. இந்த மாணவர்கள் சீனாவில் தங்கியுள்ள இடங்களில் வைரஸ் பாதிப்பு இல்லை. வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்ட இடத்திற்கும், இவர்கள் தங்கியுள்ள இடத்திற்கும் சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது’ என்றார்.
Related Tags :
Next Story