சீனாவில் இருந்து குமரிக்கு வந்த 5 மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை
சீனாவில் இருந்து குமரிக்கு வந்த 5 மாணவ -மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
நாகர்கோவில்,
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இறப்பவர்களின் எண்ணிக்கை தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஹுபெய் மாகாணத்தில் மட்டும் 204 பேர் இறந்துள்ளனர். அதேபோல வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளவர்களின் எண்ணிக்கை 9,692 ஆக அதிகரித்துள்ளது. கல்வி, தொழில், வணிக ரீதியாக பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சீனாவில் தங்கி உள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் அவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி கொண்டு இருக்கிறார்கள். அதில் சிலருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு இந்தியா உள்பட 20 நாடுகளுக்கு இந்த வைரஸ் தாக்குதல் பரவி உள்ளது. ஆனாலும் இந்தியாவில் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக தனி வார்டுகள் அமைக் கப்பட்டுள்ளன. நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும் 4 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இந்த வார்டில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
குமரி மாவட்டம் திருவட்டார் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் சீனாவில் ஹுபெய் மாகாணம் உகான் நகரத்தில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரியில் படித்து வருகிறார்கள். சீனாவில் கொரோனோ வைரஸ் தாக்குதல் அதிகமாக இருந்து வரும் பகுதிகளில் இந்த உகான் நகரமும் ஒன்று ஆகும். இந்தநிலையில் அந்த மாணவர்கள் 4 பேரும் கடந்த 12 நாட்களுக்கு முன்னர் சீனாவில் இருந்து குமரி மாவட்டம் திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றிய செய்திகள், விழிப்புணர்வு தகவல்களை பார்த்த அவர்களது குடும்பத்தினர் மாணவர்கள் 4 பேரையும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தினர்.
இதையடுத்து 4 பேரும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பின்னர் டாக்டர்களிடம், 4 பேரும் கடந்த 12 நாட்களுக்கு முன்னர் சீனாவில் இருந்து வந்த தகவலை தெரிவித்து தங்களை பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து டீன் சுகந்தி ராஜகுமாரி உத்தரவின் பேரில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள் சீனாவில் படிக்கும் மாணவர்கள் 4 பேரிடமும் உள்ளதா? என்பது குறித்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. ஆனாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு, அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபருக்கு 14 நாட்களுக்கு பிறகு தான் தெரிய வரும் என்பதால் 4 பேரையும் அவரவர் வீடுகளுக்குச் சென்று தங்கியிருக்க டாக்டர்கள் அறிவுறுத்தினர். மேலும், இன்னும் 5 நாட்கள் மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்லக்கூடாது. உங்களது வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும். தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் கூறி அவர்களை டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.
இதேபோல் சீனாவின் மற்றொரு பகுதியில் உள்ள மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடந்த 1 மாதத்துக்கு முன் குமரி மாவட்டம் வந்துள்ளார். அவர் மீண்டும் சீனா செல்வதற்கு தனக்கு எந்த நோயும் இல்லை என்று சான்றளிக்கக்கோரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்தார். இதையடுத்து அவரையும் டாக் டர்கள் பரிசோதனை செய்தனர். அவருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. ஆனாலும் டாக்டர்கள் அவரிடம், நீங்கள் தற்போது சீனாவுக்கு செல்வது சரியல்ல. அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே 3 மாதங்களுக்கு பிறகு சீனாவுக்கு செல்லுங்கள். அப்போது உங்களுக்கு நீங்கள் கேட்ட சான்று தருகிறோம் என்று கூறி அனுப்பி வைத்தனர். அவரையும் வீட்டில் தங்கி இருக்கவும், வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று டாக்டர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி பொது மருத்துவத்துறை தலைவர் பிரின்ஸ் பயஸிடம் கேட்ட போது, சீனாவில் உகான் நகரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படிக்கும் குமரி மாவட்டம் திருவட்டார் பகுதியை சேர்ந்த 4 மாணவர்களும், மற்றொரு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் குமரி மாவட்ட மாணவி ஒருவரும் பரிசோதனைக்காக வந்தார்கள்.
அவர்கள் 5 பேருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி எதுவும் இல்லாததால் வீட்டிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள் என்றார்.
Related Tags :
Next Story