கைது நடவடிக்கையால் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தவர்களே நீக்கி உள்ளனர் கூடுதல் டி.ஜி.பி. பேட்டி
கைது நடவடிக்கையால் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தவர்களே நீக்கி உள்ளனர் என கூடுதல் டி.ஜி.பி. ரவி பேட்டி அளித்துள்ளார்.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்படும்போது ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய சட்டப்பூர்வமான கடமைகள் குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கத்துக்கு மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தலைமை தாங்கினார்.
குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கான கூடுதல் டி.ஜி.பி. ரவி, புதுச்சேரி மனித உரிமை ஆணைய தலைவர் ஜெயச்சந்திரன், மற்றும் மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் பேசியதாவது:-
630 பேர் அடையாளம்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போதைய காலத்தில் அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க சமூக மாற்றத்தை கொண்டுவர வேண்டும். பாலியல் குற்றங்களை பற்றி பேசுவதைவிட, அவற்றை தடுப்பதற்கான செயலில் இறங்க வேண்டும். இந்த சமூகத்தின் தகப்பனாக ஆசிரியர்கள் உள்ளனர். இதுபோன்ற குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து தமிழக கூடுதல் டி.ஜி.பி. ரவி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்த கருத்தரங்கத்தில் கொடுக்கப்படும் பயிற்சி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான தொடக்கம் ஆகும். பாலியல் குற்றங்கள் அதிகளவில் முகம் தெரியாத நபர்களால் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்கள் மூலமாக நடக்கிறது. தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்த மற்றும் அதனை பகிர்ந்த 630 பேர் அடையாளம் காணப்பட்டு, சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அந்த பட்டியலை அனுப்பி, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
9 பேர் கைது
தற்போது வரை குழந்தைகள் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கையின் காரணமாக இணையதளங்களில் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் கைது நடவடிக்கையால் இணையதளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தவர்களே நீக்கி உள்ளனர்.
காவலன் செயலி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 16 லட்சம் பேர் இதுவரை காவலன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். அதில் 90 சதவீதம் பெண்கள் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story