நாகர்கோவிலில் அரசு ஊழியர்கள்- குடும்பத்தினருக்கான விளையாட்டு போட்டி


நாகர்கோவிலில் அரசு ஊழியர்கள்- குடும்பத்தினருக்கான விளையாட்டு போட்டி
x
தினத்தந்தி 2 Feb 2020 3:45 AM IST (Updated: 2 Feb 2020 2:12 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் அரசு ஊழியர்கள், குடும்பத்தினருக்கான விளையாட்டு போட்டியை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில், 

குமரி மாவட்ட அரசுத்துறைகளின் ஊழியர்கள், அதிகாரிகள், அவர்களுடைய குடும்பத்தினருக்கான 2 நாள் விளையாட்டுப் போட்டிகள் நேற்று காலை நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கியது. போட்டிகளை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அதிகாரி டேவிட் டேனியல் வரவேற்று பேசினார்.

நேற்று அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளில் 40 வயதுக்கு உட்பட்டோர் ஒரு பிரிவாகவும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றொரு பிரிவாகவும் போட்டிகள் நடந்தன. இதில் ஆண், பெண் இருபாலருக்கும் 100 மீ., 200 மீ., 800 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகளும், மேஜைப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, கபடி போன்ற குழு போட்டிகளும் மற்றும் செஸ், கேரம் போட்டிகளும், பெண்களுக்கான எறிபந்து, கைப்பந்து போட்டிகளும் நடந்தது.

இதேபோல் அரசு ஊழியர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற போட்டிகளும், பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், கோ-கோ, இசைநாற்காலி, தாம்போலா, பல்லாங்குழி, பாண்டி போன்றவையும் நடந்தது. போட்டிகள் 6 வயது முதல் 8 வயது வரையிலான சிறுவர்கள், 9 முதல் 10 வயது வரையிலானவர்கள், 11 முதல் 13 வயது வரையிலானவர்கள், 14 வயது முதல் 16 வயது வரையிலானவர்கள், 17 முதல் 19 வயது வரையிலானவர்கள், 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் என பல்வேறு பிரிவுகளாக நடந்தது.

2-வது நாள் போட்டிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. மாலையில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.

Next Story