நாமக்கல்லில் ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டி 957 பேர் பங்கேற்பு


நாமக்கல்லில் ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டி 957 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 2 Feb 2020 4:30 AM IST (Updated: 2 Feb 2020 2:12 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் நேற்று ஆசிரிய, ஆசிரியைகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் 957 பேர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், மோகனூர், சேந்தமங்கலம், நாமகிரிபேட்டை மற்றும் பரமத்திவேலூர் என 8 வட்டாரங்களிலும் வட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் தேர்வு செய்யப்பட்ட அணிகள் பங்கேற்ற மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உஷா தொடங்கி வைத்தார். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 957 ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

பரிசளிப்பு விழா

இதையொட்டி ஆசிரியர்களுக்கு கபடி, கைப்பந்து, இறகுபந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும், ஆசிரியைகளுக்கு எறிபந்து, கோ-கோ உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மாலையில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த பரிசளிப்பு விழாவில் மாவட்ட கல்வி அலுவலர்கள் உதயகுமார், ரவி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், துணை ஆய்வாளர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story